செய்திகள்

கிரிக்கெட் வீரர் காம்பீர் டெல்லி தொகுதியில் போட்டி? பா.ஜனதா பட்டியலில் இடம்பிடித்தார்

Published On 2019-03-27 09:07 GMT   |   Update On 2019-03-27 09:07 GMT
டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் போட்டியிட தகுதி கொண்ட 31 வேட்பாளர்கள் பட்டியலில் கவுதம் காம்பீர் பெயர் இடம் பெற்றுள்ளது. #GautamGambhir
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

டெல்லி தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது. எனவே அங்கு 7 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய பா.ஜனதா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சியும், ஆம்ஆத்மி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் பா.ஜனதா இன்னமும் வேட்பாளர்களை தேர்வு செய்யாமல் உள்ளது. காங்கிரஸ்-ஆம்ஆத்மி கூட்டணி வேட்பாளர்களை பொறுத்து புதுமுகங்களை களம் இறக்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவர் தேர்தலில் போட்டியிட பா.ஜனதா தலைவர்கள் வாய்ப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் போட்டியிட தகுதி கொண்ட 31 வேட்பாளர்கள் பட்டியலை டெல்லி மாநில பா.ஜனதா தயாரித்துள்ளது. அந்த பட்டியலில் கவுதம் காம்பீர் பெயரும் இடம் பெற்றுள்ளது.

புதுடெல்லி தொகுதியில் கவுதம் காம்பீரை போட்டியிட வைக்கலாம் என்று மாநில பா.ஜனதா தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட மீனாட்சி லேகி வெற்றி பெற்றார். அவருக்கு பதில் இந்த தடவை காம்பீர் களம் இறங்க உள்ளார்.

காம்பீர் பெயருடன் மேலும் 2 பேர் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆய்வு செய்து முடிவெடுக்க உள்ளனர்.

புதுடெல்லி தொகுதி தவிர வடக்கு மேற்கு டெல்லி, கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, சாந்தினி சவுக், தெற்கு டெல்லி ஆகிய தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட உள்ளது. #GautamGambhir
Tags:    

Similar News