செய்திகள்
ராதாகிருஷ்ணன் டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

கேரளாவில் காங்கிரஸ் ஆதரவாளரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க.வில் இணைந்தார்

Published On 2019-03-18 05:22 GMT   |   Update On 2019-03-18 05:22 GMT
கேரளாவில் காங்கிரஸ் ஆதரவாளரான முன்னாள் துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இணைந்தார். #BJP #Radhakrishnan
திருவனந்தபுரம்:

கேரளாவில் பாராளுமன்ற தேர்தலில் இம்முறை மும்முனை போட்டி நடக்கிறது.

கேரளாவில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, இப்போது நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் கணக்கை தொடங்கி விட தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதற்காக கட்சி சார்பற்ற பிரமுகர்களை வளைத்து தேர்தலில் நிறுத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது.

அதன்படி பிற கட்சிகளில் இருக்கும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து பாரதிய ஜனதா வேட்பாளர்களாக களம் இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நேற்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். டெல்லியில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இணைந்தார்.

இவர் கேரள பப்ளிக்சர்வீஸ் கமி‌ஷன் முன்னாள் தலைவரான இவர் காலடியில் உள்ள ஸ்ரீசங்கராச்சார்யா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஆவார்.

முன்னாள் துணை வேந்தர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் சமீபத்தில் நடந்த சபரிமலை போராட்டத்தில் பங்கேற்றவர். இதனால் பக்தர்கள் மத்தியில் அறிமுகமானவர்.

எனவே இவரை ஆலப்புழா பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. கேரள பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது இவரது பெயரும் பட்டியலில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. #BJP #Radhakrishnan
Tags:    

Similar News