செய்திகள்

உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவேன் - பிரியங்கா காந்தி சொல்கிறார்

Published On 2019-03-18 00:08 GMT   |   Update On 2019-03-18 00:08 GMT
உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவேன் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார். #PriyankaGandhi #UttarPradesh
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும், சோனியாவின் மகளுமான பிரியங்கா, தீவிர அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். கட்சியின் பொதுச்செயலாளராகவும், உத்தரபிரதேச கிழக்கு பிராந்திய பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ள அவர், கடந்த மாதம் உத்தரபிரதேசத்தில் தனது கட்சிப்பணிகளை தொடங்கினார்.

தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரயாக்ராஜ் மற்றும் மிர்சாபூர் மாவட்டங்களில் பிரியங்கா, கங்கை நதி யாத்திரை மேற்கொள்கிறார். 3 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையை திரிவேணி சங்கமத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறார். கங்கை நதியில் சுமார் 140 கி.மீ. தூரத்துக்கு செல்லும் அவர் நதிக்கரையில் உள்ள கிராம மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

இந்த பயணத்தை முன்னிட்டு உத்தரபிரதேச மக்களுக்கு பிரியங்கா, கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதிக்கு கட்சியின் பொறுப்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னை நியமித்து உள்ளார். இந்த மாநில மக்களுக்கும், எனக்கும் பழைய தொடர்பு ஒன்று உண்டு. ஒரு காங்கிரஸ் தொண்டராக உத்தரபிரதேசத்தில் உங்கள் ஆதரவுடன் அரசியல் மாற்றத்தை கொண்டு வரவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

மாநிலத்தில் தற்போதைய அரசியல் சூழலில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் அனைவரும் கடும் அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வலிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர். உங்கள் கருத்துகளை கேட்காமல், கவலைகளை பகிர்ந்து கொள்ளாமல் மாநிலத்தில் எந்த அரசியல் மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

எனவே உங்கள் வீட்டுக்கே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வருகிறேன். அவ்வாறு உங்கள் கருத்துக்களை அறிந்த பிறகு உண்மையின் அடித்தளத்தில் மாநிலத்தில் அரசியல் மாற்றத்தை நாம் இணைந்து கொண்டு வருவோம். உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கி நாம் நகர்வோம்.

இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

கங்கை நதி யாத்திரைக்காக பிரியங்கா நேற்றே உத்தரபிரதேசம் சென்றார். லக்னோ விமான நிலையத்தில் அவரை மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் மற்றும் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். அங்கிருந்து கட்சி அலுவலகம் சென்ற பிரியங்கா, கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் மாலையில் பிரயாக்ராஜ் நகருக்கு சென்று சேர்ந்தார். அவரது கங்கை நதி யாத்திரைக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. மேலும் இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. 
Tags:    

Similar News