இந்தியா

உங்கள் நாட்டை கவனியுங்கள்: பாகிஸ்தான் முன்னாள் மந்திரிக்கு கெஜ்ரிவால் பதிலடி

Published On 2024-05-25 11:33 GMT   |   Update On 2024-05-25 11:33 GMT
  • டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.
  • பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து வருபவர்களின் தலையீட்டை இந்தியா சகித்துக்கொள்ளாது என்றார்.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகள், அரியானாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.

6-வது கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

அதன்பின் அவர் கூறுகையில், என்னுடைய தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து வாக்கு செலுத்தினேன். என்னுடைய தாயார் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் செல்ல முடியவில்லை. சர்வாதிகாரம், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கத்துக்கு எதிராக வாக்களித்து இருக்கிறேன். நீங்களும் சென்று வாக்கை செலுத்துங்கள் என தெரிவித்தார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆட்சியின்போது மந்திரியாக இருந்த பவத் உசைன் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், வெறுப்பு மற்றும் பயங்கரவாதம் ஆகிய சக்திகளை அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவை வீழ்த்தட்டும் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்து கூறுகையில், சவுத்ரி அவர்களே, எங்களுடைய விவகாரங்களை கையாள்வதற்கு நானும், என்னுடைய நாட்டு மக்களும் முழு அளவில் திறன் படைத்தவர்களாக இருக்கிறோம். உங்களுடைய டுவிட் பதிவு தேவையற்றது. பாகிஸ்தானில் இப்போதுள்ள நிலைமையோ மிக மோசம். நீங்கள் உங்களுடைய நாட்டை கவனித்து கொள்ளுங்கள். இந்தியாவில் நடைபெறும் தேர்தல் எங்களுடைய உள்நாட்டு விவகாரம். பயங்கரவாதத்திற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்து வருபவர்களின் தலையீட்டை இந்தியா சகித்துக்கொள்ளாது என தெரிவித்தார்.

Tags:    

Similar News