செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 15 நிமிடம் காத்திருந்து பீம் ஆர்மி தலைவரை சந்தித்த பிரியங்கா காந்தி

Published On 2019-03-14 08:21 GMT   |   Update On 2019-03-14 08:21 GMT
உத்தரபிரதேசத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராணுவ தலைவர் சந்திரசேகர் அசாத்தை 15 நிமிடங்கள் காத்திருந்து நலம் விசாரித்துள்ளார். #PriyankaGandhi #VisitsChandrasekaraAzad
மீரட்:

உத்தரபிரதேசத்தில் பீம் ஆர்மி எனும் அமைப்பு தலித் மக்களுக்காக பணியாற்ற ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்(30) ஆவார். வழக்கறிஞரான இவர் கடந்த செவ்வாயன்று அரசின் அனுமதியின்றி தேர்தலுக்காக மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த முற்பட்டார்.  அப்போது தேர்தல் விதிகளை மீறியதாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து  சந்திரசேகர ஆசாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று திடீரென உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அவரை மருத்துவமனையில் சந்தித்தார். முன்னதாக சந்திரசேகர் ஆசாத்தை காண பிரியங்காவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சுமார் 15 நிமிட வாக்குவாதத்திற்கு பின்னர் பிரியங்கா, அசாத்தை காண அனுமதிக்கப்பட்டார்.

இந்த சந்திப்பு குறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், ''நான் இங்கு சந்திரசேகர் ஆசாத்தின் உடல்நலனை விசாரிக்கவே வந்தேன். அவர் இளம் தலைவர் ஆவார். ஆனால் இந்த மாநில அரசு அவரை பேச விடாமல், அவருக்கு எதிராக  செயல்பட்டு அவரை ஒடுக்கப் பார்க்கின்றது. அவரை கைது செய்திருக்கக்கூடாது. இது மிகவும் தவறான செயலாகும். ஆசாத்தின் தைரியம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதன் காரணமாகவே அவரை சந்திக்க வந்தேன்'' என கூறினார்.

பிரியங்கா காந்தி பொறுப்பில் உள்ள உத்தரபிரதேசத்தின் 41 மக்களவை தொகுதிகளில் சுமார் 30 சதவீதம் தலித் மக்களின் வாக்குகள் உள்ளன. எனவே, அசாத்தை சந்தித்தது, தலித் மக்களின் வாக்குகளை பெறும் பிரியங்காவின் வியூகமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் சில சிறிய கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. #PriyankaGandhi #VisitsChandrasekaraAzad

Tags:    

Similar News