செய்திகள்

காஷ்மீர்-இமாச்சலபிரதேசத்தில் கடும் பனிப்பொழிவுடன் பலத்த மழை எச்சரிக்கை

Published On 2019-01-19 07:38 GMT   |   Update On 2019-01-19 07:38 GMT
காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுடன் மிக பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #IMD
புதுடெல்லி:

காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவும் குளிரும் நிலவுகிறது.

இதற்கிடையே இமயமலையின் மேற்கு பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (20-ந் தேதி) முதல் 23-ந் தேதி வரை மேற்கு இமயமலை பகுதிகளான காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுடன் மிக பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீரில் இன்றும், நாளையும் பனிப்பொழிவு மிக கடுமையாக இருக்கும் என்றும் பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம், வடக்கு ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


துருவப் பகுதியில் இருந்து மணிக்கு 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் அதிக பட்சம் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் குளிர் காற்று வீசும்.

டெல்லி, ஒடிசாவில் பனிமூட்டம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடல் பகுதியில் இருந்து வீசும் காற்று காரணமாக தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் தற்போது நிலவும் குளிர் தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD

Tags:    

Similar News