search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய வானிலை மையம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் கப்பல்கள் மற்றும் மீனவர்கள் நலன் கருதி புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு உள்ளது.
    • மாலத்தீவின் பரிந்துரையின்படி புயலுக்கு மிதிலி என பெயர் சூட்டப்பட உள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் கடந்த 14-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்தது. நேற்று அந்த புயல் சின்னம் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று இரவு அது வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது.

    இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் தீவிரம் அடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 380 கி.மீ. தொலைவில் கிழக்கு, தென்கிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்தது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகருகிறது. அது நாளை (17-ந்தேதி) ஒடிசா கடற்கரை பகுதியை அடைகிறது. பின்னர் கிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளதேசத்தை அடைகிறது. அது 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. அப்படி புயலாக மாறும்பட்சத்தில் அதற்கு மாலத்தீவு பரிந்துரைத்த 'மிதிலி' என்ற பெயர் சூட்டப்படுகிறது.

    அது வருகிற 18-ந்தேதி வங்காள தேசத்தில் மோங்லா - கெபுபரா கடற்கரை இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அது கரையை கடக்கும்போது மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். இதனால் ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்யும். தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழை குறையும்.

    • வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாகிறது
    • தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாகிறது. தொடர்ந்து 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய கூடும்.

    இதனால் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா, சத்தீஸ்கர் நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    • மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 18-ந் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா, சத்தீஸ்கர் நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 3 மாநிலங்களையொட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என்பதால் இந்த மாநிலங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர். இருப்பினும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 18-ந் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • மும்பையில் ஒரு மாதத்திற்கு பிறகு பருவமழை பெய்த tஹு.
    • வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் ஜூலை மாதம் பெய்த பலத்த மழையால் நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்தது. தற்போது ஏரிகளில் 91 சதவீதம் அளவுக்கு தண்ணீர் உள்ளது.

    இதற்கிடையே, நேற்று மும்பை நகரில் பரவலாக மழை பெய்தது. சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நகரில் வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவியது.

    இந்நிலையில் மும்பையில் இன்றும் பலத்த மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மும்பை நகருக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, துலே, ஜல்கான் மற்றும் நாசிக் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் அவசர காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 456 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
    • அரக்கோணத்தில் இருந்து 43 பேர் அடங்கிய தேசியபேரிடர் மீட்புக்குழு வரவழைக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் வருகிற 6-ந் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. எனவே அங்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையே கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் கூடலூர் அடுத்த ஓவேலி சூண்டி ரோட்டில் ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரோட்டில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினார்கள்.

    இதற்கிடையே நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது. இதில் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தின் 6 தாலுகாக்களில் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 283 இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளை கண்காணிக்க 42 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் அவசர காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 456 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

    அடுத்தபடியாக வருவாய், உள்ளாட்சி, பொதுப்பணி, மருத்துவம், போலீசார், தீயணைப்பு, நெடுஞ்சாலை, மின்சாரம், பொதுப்பணி, சுகாதாரம், குடிமைப்பொருள் வழங்கல் ஆகிய துறைகளை சேர்ந்த ஊழியர்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.

    அனைத்து தாலுகாக்களிலும் பேரிடர் மீட்பில் பயிற்சி பெற்ற 3500 முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் 200 பேரிடர்கால நண்பர்கள் ஆகியோர் தயாராக உள்ளனர்.

    எனவே அரக்கோணத்தில் இருந்து 43 பேர் அடங்கிய தேசியபேரிடர் மீட்புக்குழு வரவழைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஊட்டி, கூடலூர் கோட்டத்தில் முகாமிட்டு உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்புக்குழுவுடன் இணைந்து செயல்பட தயார்நிலையில் உள்ளது. இதுதவிர பருவமழை மற்றும் இயற்கை பேரிடர் பாதிப்பு ஏற்படும்போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வசதியாக மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 மற்றும் 0423-2450034, 2450035 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    அதேபோல ஊட்டி: 0423-2445577, குன்னூர்: 0423-2206002, கூடலூர்: 04262-261295 ஆகிய கோட்டங்களில் பாதிக்கப்படும் பொதுமக்கள் உடனடியாக மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, கலெக்டர் நேர்முக உதவியாளர் தனபிரியா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரி பிரவீண் பிரசாத், பேரிடர் மேலாண்மைத்துறை தாசில்தார் காயத்ரி, ஊட்டி தாசில்தார் சரவணக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதேபோல கோவை மாவட்டம் வால்பாறை பகுதியிலும் நேற்று மதியம் கனமழை பெய்தது. இதன் காரணமாக வால்பாறை-சோலையாறு ரோட்டில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே அந்த பகுதியை சேர்ந்த எஸ்டேட் தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    வால்பாறையில் நேற்று காலை நிலவரப்படி 37 மி.மீ, மேல் நீராற்றில் 39 மி.மீ, சோலையாறு அணையில் 22 மி.மீ. மழை பெய்து உள்ளது. இதனால் சோலையாறு அணையில் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 252 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.

    • வடகிழக்கு மாநிலங்களில் வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
    • வெப்பநிலை அதிகரிப்பு எதிரொலியாக ஒடிசாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இந்நிலையில், அடுத்த 5 தினங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேற்கு வங்கத்தில் இன்று முதல் வெப்ப அலை வீசும். ஒடிசாவில் நாளை வீசும் என கூறப்பட்டுள்ளது. தற்போது மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள், குஜராத், மகாராஷ்டிர மாநிலத்தின் உள்மாவட்டங்கள், ஒடிசா, தெலுங்கானாவில் அதிகபட்ச வெப்பம் 40 முதல் 42 டிகிரி செல்சியசாக உள்ளது. இதர மாநிலங்களில் 40 டிகிரிக்கும் குறைவாக உள்ளது.

    ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    ஒடிசாவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏப்ரல் 16-ம் தேதி வரை அங்கன்வாடிகள், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • இயல்பு முதல் இயல்புக்கு மேல் மழை பெய்வதற்கு 67 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
    • தீபகற்ப பகுதியின் பல இடங்களிலும், கிழக்கு-மத்திய, கிழக்கு, வடகிழக்கு பகுதிகள் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் இயல்பான மழை பெய்யக்கூடும்.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்கள் பயிர் சாகுபடிக்கு பெரிதும் நம்பி இருப்பது பருவமழையைத்தான். பருவமழை பொய்த்துப்போகிறபோது அது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஏனென்றால் 52 சதவீத சாகுபடி நிலங்கள், பருவமழையைத்தான் நம்பி உள்ளன.

    இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட குறைவான அளவே இருக்கும் என்று தனியார் வானிலை மையமான 'ஸ்கைமெட்' தெரிவித்தது. இது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    ஆனால் விவசாயிகள் நிம்மதிப்பெருமூச்சு விடவைக்கும் தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, இயல்பான அளவுக்கு பெய்யும் என்று அது அறிவித்துள்ளது. எல்நினோ நிலைமைக்கு மத்தியிலும் மழை இயல்பான அளவு இருக்கும்.

    இந்தியாவில் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை இயல்பான அளவுக்கு பெய்துள்ளது.

    இந்திய புவி அறிவியல்கள் துறை அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரன், பருவமழை தொடர்பாக டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "இந்தியாவில் தென்மேற்கு பருவமழைக்காலத்தில் (ஜூன்-செப்டம்பர்) இயல்பான அளவுக்கு மழை பெய்யும். இது தோராயமான நீண்ட கால சராசரியான 96 சதவீதமாக (இதில் 5 சதவீதம் தவறலாம்) இருக்கும்" என தெரிவித்தார்.

    இந்திய வானிலை மையத்தின் தலைமை இயக்குனர் மிருதியுஞ்சய் மொகபத்ரா கூறியதாவது:-

    இயல்பு முதல் இயல்புக்கு மேல் மழை பெய்வதற்கு 67 சதவீதம் வாய்ப்பு உள்ளது. வடமேற்கு, மேற்கு-மத்தி, வடகிழக்கு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலத்தில் இயல்பு முதல் இயல்புக்கு மேல் மழை பெய்யும்.

    தீபகற்ப பகுதியின் பல இடங்களிலும், கிழக்கு-மத்திய, கிழக்கு, வடகிழக்கு பகுதிகள் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் இயல்பான மழை பெய்யக்கூடும்.

    ஜூலை மாதத்தில் எல் நினோ நிலைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்காலத்தின் இரண்டாம் பாதியில் அவற்றின் தாக்கம் உணரப்படலாம்.

    எல்லா எல்நினோ ஆண்டுகளும் மோசமான பருவமழை ஆண்டுகள் என்று கூறி விட முடியாது. 1951 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையில் 15 எல் நினோ ஆண்டுகள் இருந்தன. அவற்றில் 6 பருவ மழைக்காலத்தில் இயல்பு மற்றும் இயல்புக்கு மேல் பருவமழை பெய்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    50 ஆண்டு சராசரியான 87 செ.மீட்டரில் 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரையிலான மழை இயல்பான மழை அளவாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • வருகிற 13-ந்தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகிறது.
    • புயலாக மாறுமா? என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்.

    சென்னை:

    வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடந்தது.

    மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்த போது பலத்த காற்று வீசியது. மரங்களும் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளிலும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகாரிகள் மின்னல் வேகத்தில் சரி செய்தனர். இதனால் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

    இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் இன்று தகவலை வெளியிட்டுள்ளது. அதில் வருகிற 13-ந்தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகிறது. இது 13, 14-ந்தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற உள்ளது. பின்னர் அது புயலாக மாறுமா? என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்.

    13-ந்தேதிக்கு பிறகே அது தொடர்பான கூடுதல் தகவல்கள் தெரியவரும் என்று தெரிவித்துள்ளது.

    மாண்டஸ் புயல் கரையை கடந்து ஓய்ந்துள்ள நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய புயல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மேலடுக்கு சுழற்றி வலுப்பெற்று புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 13-ந்தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவான பின்னர் அது 17, 18, 19 ஆகிய தேதிகளில் புயலாக மாறி கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த புதிய புயல் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

    புயல் கரையை கடக்கும் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் தொடர் மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதிய புயல் உருவாகும் பட்சத்தில் தமிழக கடலோர பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. புதிய புயலின் தாக்கம் எப்படி இருக்கும்? அது எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது போன்ற விரிவான தகவல்களை வானிலை மையம் அடுத்தடுத்த அறிவிப்புகளில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×