செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா குற்றச்சாட்டு

Published On 2019-01-19 01:42 GMT   |   Update On 2019-01-19 01:42 GMT
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பா.ஜனதா பேரம் பேசியதாக சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். #Siddaramaiah #Congress
பெங்களூரு :

கர்நாடக சட்டமன்ற காங்கிரஸ் குழு கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் நடந்தது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு அதன் தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சட்டமன்ற காங்கிரஸ் குழு சிறப்பு கூட்டத்திற்கு இன்று (அதாவதுநேற்று) அழைப்பு விடுத்திருந்தோம். இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் எங்கள் கட்சி மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் கலந்துகொண்டனர்.

80 எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் மட்டும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. உமேஷ் ஜாதவ் எம்.எல்.ஏ., கடிதம் மூலம் தனக்கு உடல்நிலை சரி இல்லை என்று காரணம் தெரிவித்துள்ளார்.

நாகேந்திரா, எங்கள் மேலிட பொறுப்பாளரை தொடர்பு கொண்டு, கோர்ட்டு வழக்கில் விசாரணையில் பங்கேற்க உள்ளதால் ஆஜராக இயலவில்லை என்று கூறி இருக்கிறார்.

மற்ற 2 எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி (கோகாக்), மகேஷ் குமடள்ளி (அதானி) ஆகியோர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. நாகேந்திரா மற்றும் உமேஷ் ஜாதவ் ஆகியோர் கூறிய காரணங்கள் உண்மையானதா? என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம்.

கூட்டத்தை புறக்கணித்த 4 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்புவோம். அவர்கள் விளக்கம் அளித்த பிறகு அதுபற்றி கட்சி மேலிட தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் ராஜினாமா செய்வதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அது வெறும் வதந்தி தான். அதனால் நாங்கள் சிறப்பு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினோம்.

எங்கள் கட்சியை சேர்ந்த யாரும் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள். 80 எம்.எல்.ஏ.க்களில் 76 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் ஒரு நியமன உறுப்பினரும் அடங்குவார். கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்கிறது. 2 முறை முயற்சி செய்து, தோல்வி அடைந்தனர். இப்போது மீண்டும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.



ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக பா.ஜனதாவினர் செயல்படுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்றனர். இன்னும் அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள்?.

கர்நாடக கூட்டணி அரசை கவிழ்க்க, பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மற்ற முன்னணி தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏனென்றால், தென்இந்தியாவில் கர்நாடகத்தில் மட்டுமே பா.ஜனதா சற்று பலமாக உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அக்கட்சி நடத்திய ஆய்வில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தகவல் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வெட்கம் இல்லாமல், பிரதமர் மோடியே கூட்டணி அரசை கவிழ்க்க தூண்டிவிட்டுள்ளார்.

இன்று(நேற்று) நடந்த கூட்டத்தில் நாங்கள் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளோம். எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரம் உள்ளது.

அதில் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வரை வழங்க பா.ஜனதாவினர் முன்வந்துள்ளனர். மேலும் மந்திரி பதவியை வழங்குவதாகவும் உறுதியளித்து உள்ளனர். மோடி தன்னை இந்த நாட்டின் காவல்காரர் என்று கூறிக்கொள்கிறார். இது தான் காவல்காரரின் வேலையா?.

பா.ஜனதாவின் சதி வேலையை முறியடிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைக்க முடிவு செய்துள்ளோம்.

எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஆனாலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் ஒரே இடத்தில் தங்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார். #Siddaramaiah #Congress
Tags:    

Similar News