செய்திகள்

எம்பிக்கள் தொடர் அமளி - மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

Published On 2018-12-18 10:02 GMT   |   Update On 2018-12-18 10:02 GMT
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RajyaSabhaAdjourned
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்றும் பாராளுமன்றத்தில் அமளி நீடித்தது.

மக்களவை இன்று காலை கூடியதும், மேகதாது அணைத்திட்டத்திற்கு எதிராக அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல் ரபேல் வழக்கின் தீர்ப்பு மற்றும் சீக்கிய கலவர வழக்கின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  ரபேல் விவகாரத்தில் பொய்யான செய்திகளை பரப்பிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் கோஷமிட்டனர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் மாநிலங்களவையிலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் போட்டி போட்டு முழக்கங்கள் எழுப்பியதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.



2 மணிக்கு அவை கூடியபோது ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் மீண்டும் முழக்கமிட்டனர்.  அவர்களுக்கு பதிலடியாக காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதேபோல் அதிமுக, கேரள கம்யூனிஸ்ட் எம்பிக்களும் தங்கள் கோரிக்கைளை முன்வைத்து முழக்கமிட்டனர். இதையடுத்து மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RajyaSabhaAdjourned
Tags:    

Similar News