செய்திகள்

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- மும்பை விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு

Published On 2018-12-15 07:00 GMT   |   Update On 2018-12-15 07:00 GMT
மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அந்த விமானம் தீவிரமாக சோதனையிடப்பட்டது. #IndiGO #BombThreat
மும்பை:

மும்பையில் இருந்து லக்னோவுக்கு இண்டிகோ பயணிகள் விமானம் இன்று காலை 6.05 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த  விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து விமான புறப்பாடு நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விமானம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில், சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கண்டறியப்படவில்லை.

விமானம் பாதுகாப்பாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிறகு, பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்டது. வெடிகுண்டு சோதனை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபற்றி இண்டிகோ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “வேறு ஒரு தனியார்  விமானத்தில் வந்த பயணி, இண்டிகோ சோதனை மையத்திற்கு வந்து சில நபர்கள் இருக்கும் புகைப்படங்களைக் காட்டி, அந்த நபர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என்று கூறினார். இதையடுத்து வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. தகவல் தெரிவித்த அந்த பயணி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது” என்றார். #IndiGO #BombThreat
Tags:    

Similar News