செய்திகள்

சோனியா மருமகன் வதேராவுக்கு 3-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

Published On 2018-12-07 07:47 GMT   |   Update On 2018-12-07 07:47 GMT
நில மோசடியில் ஈடுபட்ட சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு மத்திய அமலாக்கத்துறை 3-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. #RobertVadra
புதுடெல்லி:

சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது கூறப்பட்ட நில மோசடி விவகாரம் விசுவரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

ராபர்ட் வதேரா ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ராபர்ட் வதேரா தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பிகனீர் பகுதியில் நிறைய அரசு நிலத்தை வாங்கினார். ஏழை கிராம மக்களின் மறுவாழ்வுக்காக உதவுவதாக கூறி அந்த நிலங்களை அவர் வாங்கி இருந்தார்.

ஆனால் பின்னர் அந்த அரசு நிலங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன. இதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜஸ்தான் போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்தனர். குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. முதல் சம்மனுக்கு பதில் அளிக்காத ராபர்ட் வதேரா 2-வது சம்மனுக்கு தனது பிரதிநிதியை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.

ராபர்ட் வதேராவின் கோரிக்கையை ஏற்க மறுத்த மத்திய அமலாக்கத்துறை 3-வது முறையாக மேலும் ஒரு சம்மனை அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் வந்து ஆஜராக வேண்டும் என்று அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை முன்பு ஆஜரானால் வாக்கு மூலம் கொடுக்க வேண்டியதிருக்கும். அது எதிர்காலத்தில் தனக்கு சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடும் என்று வதேரா பயப்படுகிறார். எனவே பா.ஜ.க. ஆட்சி தன்னை பழி வாங்குவதாக ராபர்ட் வதேரா கூறி வருகிறார். #RobertVadra
Tags:    

Similar News