செய்திகள்

750 கிலோ வெங்காயத்திற்கு வெறும் 1064 ரூபாய் - விரக்தியில் பிரதமர் நிதிக்கு அனுப்பிய விவசாயி

Published On 2018-12-02 15:01 GMT   |   Update On 2018-12-02 15:01 GMT
750 கிலோ வெங்காயத்திற்கு வெறும் 1064 ரூபாய் கிடைத்த விரக்தியில், தனது வருமானத்தை பிரதமர் அலுவலகத்துக்கு மகாராஷ்டிரா விவசாயி அனுப்பி வைத்துள்ளார். #MumbaiFormer #PMModi
மும்பை:

மகாரஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நிபாட் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் சாதே. விவசாயியான இவர் தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டு வந்தார்.

தனது நிலத்தில் விளைந்த வெங்காயத்தை அறுவடை செய்தார். மொத்தம் 750 கிலோ இருந்தது. அவற்றை நாசிக் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றார். அங்கு ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் மட்டுமே விலை போனது.

இதனால் மனம் நொந்துபோன சஞ்சய், ஒரு கிலோவுக்கு 1.40 ரூபாய் என பேசி முடித்தார். தன்னிடம் இருந்த மொத்த வெங்காயத்தையும் விற்றார். அதில் கிடைத்த பணத்துடன் வீடு வந்து சேர்ந்தார். கடந்த 4 மாத காலமாக கஷ்டப்பட்டு உழைத்தும் சரியான பலன் கிடைக்கவில்லையே என கடும் விரக்தியில் இருந்தார்.

உடனடியாக அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இப்படி கஷ்டப்பட்டு கிடைக்கும் பணம் விவசாயிகளின் வாழ்க்கையை எப்படி கரை சேர்க்கும் என்பதை அதிகாரிகளுக்கு புரிய வைக்க முடிவெடுத்தார்.

இந்நிலையில், வெங்காயம் விற்று கிடைத்த பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்ப முடிவு செய்தார். அருகிலுள்ள  
தபால் அலுவலகம் சென்ற அவர், அங்கு மணியார்டர் மூலம் பிரதமர் நிதிக்கு அந்த தொகையை அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து சஞ்சய் கூறுகையில், 4 மாதம் கஷ்டப்பட்டு உழைத்தும் பலன் கிடைக்கவில்லை. எங்கள் கஷ்டம் உயர் அதிகாரிகளுக்கு தெரியவில்லை. எனவேதான் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளேன் என விரக்தியுடன் தெரிவித்தார்.

கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறையினரால் தேர்வு செய்யப்பட்டவர் சஞ்சய் சாதே என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News