செய்திகள்

கர்நாடகா இடைத்தேர்தல்- கடைசி நேரத்தில் காலை வாரிய பாஜக வேட்பாளர்

Published On 2018-11-01 11:45 GMT   |   Update On 2018-11-01 11:45 GMT
கர்நாடக மாநிலம் ராமநகரம் இடைத்தேர்தலில் முதல்வரின் மனைவியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். #RamanagaraBypoll #BJPCandidate
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் சிவமொக்கா, பெல்லாரி, மாண்டியா ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும், ராமநகரம், ஜம்கண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுககும் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. 

தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள் மட்டுமே உள்ள நிலையில், ராமநகரம் தொகுதியில் முதல்வர் குமாரசாமியை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் எல்.சந்திரசேகர் திடீரென போட்டியில் இருந்து விலகினார். அத்துடன் கட்சியில் இருந்தும் விலகிய அவர், தாய்க்கட்சியான காங்கிரசுக்கே திரும்ப உள்ளதாக கூறினார். 

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘பாஜகவில் சேர்ந்தபோது வரவேற்று, போட்டியிட வாய்ப்பு கொடுத்த எடியூரப்பாவும் மற்ற தலைவர்களும் என்னுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக ராமநகரம் தொகுதியை அவர்கள் புறக்கணித்துவிட்டனர்’ என்றார்.

சந்திரசேகர் விலகியதன்மூலம் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி எளிதில் வெற்றி பெறும் சூழல் உருவாகி உள்ளது. அதேசமயம், கடைசி நேரத்தில் வேட்பாளர் கட்சி தாவியது பாஜகவுக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது. 

ராமநகரம் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்ததால் அதிருப்தி அடைந்த சந்திரசேகர், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் சேர்ந்த சில தினங்களில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்படத்தக்கது. #RamanagaraBypoll #BJPCandidate
Tags:    

Similar News