செய்திகள்

சபரிமலை விவகாரத்தில் கைது நடவடிக்கை - கேரள அரசுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்

Published On 2018-10-27 03:00 GMT   |   Update On 2018-10-27 03:00 GMT
சபரிமலை விவகாரத்தில் அப்பாவி மக்களை கைது செய்தால் பெரிய விலை கொடுக்க நேரிடும் என மாநில அரசுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. #SabarimalaTemple #KeralaGovernment
கொச்சி:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்த நிலையில், அங்கு ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17 முதல் 22-ந்தேதி வரை நடை திறக்கப்பட்டு இருந்தது. அப்போது தடை செய்யப்பட்ட வயதுள்ள பல பெண்கள் ஐயப்பனை தரிசிக்க வந்தனர்.



அவர்களை பல இடங்களில் தடுத்து நிறுத்தி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பெண்கள் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தற்போது சபரிமலையில் நடை அடைக்கப்பட்டு அமைதி திரும்பி இருக்கும் நிலையில், அங்கு போராட்டம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை மாநில அரசு கைது செய்து வருகிறது. அந்தவகையில் இதுவரை மாநிலம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 450-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த நடவடிக்கைக்கு எதிராக பத்தனம்திட்டாவை சேர்ந்த சுரேஷ் ராஜ், அனோஜ் ராஜ் என்பவர்கள் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சபரிமலை போராட்டத்தில் பங்கேற்றதாக கூறி அப்பாவி மக்களையும் போலீசார் கைது செய்வதாக குற்றம் சாட்டியிருந்த அவர்கள், இந்த சட்டவிரோத கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கூறி இருந்தனர்.

இந்த மனுவை நேற்று விசாரித்த ஐகோர்ட்டு மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து நீதிபதி கூறுகையில், ‘மாநில அரசு வெறும் விளம்பரத்துக்காக பணியாற்றக்கூடாது. சபரிமலை விவகாரத்தில் நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும். மாறாக அப்பாவிகளை கைது செய்தால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும். அதேநேரம் சபரிமலைக்கு பக்தர்கள் மட்டும்தான் வருகிறார்களா? என்பதையும் போலீசார் விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

பின்னர் இந்த கைது நடவடிக்கை தொடர்பாக கேரள அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை 29-ந்தேதி (திங்கட்கிழமை) மீண்டும் விசாரிப்பதாக கூறி ஒத்திவைத்தார். #SabarimalaTemple #KeralaGovernment

Tags:    

Similar News