search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்டு கண்டனம்"

    சபரிமலையில் வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேரள டிஜிபிக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. #SabarimalaTemple #KeralaHighCourt
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    கேரளாவில் ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர், பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டபோது சபரிமலைக்கு செல்ல முயன்ற இளம்வயது பெண்களை போராட்டக்காரர்கள் விரட்டியடித்தனர்.

    இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சபரிமலையில் மோதல் ஏற்பட்டு போர்க்களமாக மாறியது. இந்த போராட்டத்தின் போது ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை போலீசார் அடித்து உடைத்ததாகவும், பக்தர்கள் மீது கல்வீச்சில் போலீசார் ஈடுபட்டதாகவும் கூறி அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் சபரிமலை ஆச்சார பாதுகாப்பு அமைப்பு தலைவர் அனோஜ் குமார் என்பவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலையில் இளம்வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதியான வழியில் போராடிய ஐயப்ப பக்தர்களிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டனர். சபரிமலையில் பக்தர்களின் வாகனங்களை போலீசாரே அடித்து உடைத்துள்ளனர். அவர்கள் பக்தர்கள் மீது கல்வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். இதுபோன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார்.

    மேலும் அவர் போலீசார் வன்முறையில் ஈடுபட்டதற்கான வீடியோ காட்சிகளையும் அந்த மனுவுடன் இணைத்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சபரிமலையில் வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததற்காக கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவுக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    உலகம் தற்போது எவ்வளவோ வளர்ச்சி அடைந்துவிட்டது. மனித சமூகமும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நாகரீக உலகில் சபரிமலையில் போலீசார் காட்டுமிராண்டித்தனமாக செயல்பட்டது வேதனை அளிக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சிகளை பார்க்கும் போது போலீசார் இன்னும் பழைய காலத்திலேயே இருக் கிறார்கள் என்பது தெளிவாகிறது. வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது டி.ஜி.பி. உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  #SabarimalaTemple #KeralaHighCourt




    சபரிமலை விவகாரத்தில் அப்பாவி மக்களை கைது செய்தால் பெரிய விலை கொடுக்க நேரிடும் என மாநில அரசுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. #SabarimalaTemple #KeralaGovernment
    கொச்சி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்த நிலையில், அங்கு ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17 முதல் 22-ந்தேதி வரை நடை திறக்கப்பட்டு இருந்தது. அப்போது தடை செய்யப்பட்ட வயதுள்ள பல பெண்கள் ஐயப்பனை தரிசிக்க வந்தனர்.



    அவர்களை பல இடங்களில் தடுத்து நிறுத்தி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பெண்கள் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    தற்போது சபரிமலையில் நடை அடைக்கப்பட்டு அமைதி திரும்பி இருக்கும் நிலையில், அங்கு போராட்டம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை மாநில அரசு கைது செய்து வருகிறது. அந்தவகையில் இதுவரை மாநிலம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 450-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இந்த நடவடிக்கைக்கு எதிராக பத்தனம்திட்டாவை சேர்ந்த சுரேஷ் ராஜ், அனோஜ் ராஜ் என்பவர்கள் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சபரிமலை போராட்டத்தில் பங்கேற்றதாக கூறி அப்பாவி மக்களையும் போலீசார் கைது செய்வதாக குற்றம் சாட்டியிருந்த அவர்கள், இந்த சட்டவிரோத கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கூறி இருந்தனர்.

    இந்த மனுவை நேற்று விசாரித்த ஐகோர்ட்டு மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து நீதிபதி கூறுகையில், ‘மாநில அரசு வெறும் விளம்பரத்துக்காக பணியாற்றக்கூடாது. சபரிமலை விவகாரத்தில் நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும். மாறாக அப்பாவிகளை கைது செய்தால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும். அதேநேரம் சபரிமலைக்கு பக்தர்கள் மட்டும்தான் வருகிறார்களா? என்பதையும் போலீசார் விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    பின்னர் இந்த கைது நடவடிக்கை தொடர்பாக கேரள அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை 29-ந்தேதி (திங்கட்கிழமை) மீண்டும் விசாரிப்பதாக கூறி ஒத்திவைத்தார். #SabarimalaTemple #KeralaGovernment

    அர்ச்சகர்கள் எந்திரத்தனமாக செயல்படுகின்றனரே தவிர தெய்வீக பணியை ஆற்றவில்லை என்று கோவில் அர்ச்சகர்களுக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. #MylaporeKapaleeswararTemple #HC
    சென்னை:

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவனநாதர் சன்னதியில் லிங்கத்தை பூஜிக்கும் மயில் சிலை காணாமல் போனதால், புதிய சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என ரங்கராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு டிவிசன் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.



    அப்போது, வாயில் பூவுடன் கூடிய மயில் சிலை காணாமல் போனதாகவும், ஆனால் தற்போது வாயில் பாம்புடன் இருப்பது போன்ற சிலை வைக்கப்பட்டிருப்பதாகவும், இது ஆகமத்துக்கு எதிரானது எனவும் மனுதாரர் வாதிட்டார்.

    கோவில் நிர்வாகத்தின் அறங்காவலர்களையும், செயல் அதிகாரியையும் நீக்கிவிட்டு, கோவில் முறையாக நிர்வகிப்பதை உறுதி செய்ய ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆகம வல்லுனர்கள், சட்ட வல்லுனர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிலை மாயமானது, சிலை மாறிவிட்டது என்று அரசின் கவனத்துக்கு அர்ச்சகர்கள் ஏன் கொண்டு செல்லவில்லை? அது அர்ச்சகர்களின் கடமை தானே? இப்போது எல்லாம் அர்ச்சகர்கள் எந்திரத்தனமாக செயல்படுகின்றனரே தவிர தெய்வீக பணியை ஆற்றவில்லை என்கிறபோது வேதனையாக இருக்கிறது என்றனர்.

    அப்போது அறநிலைய துறை தரப்பில் ஆஜரான வக்கீல் மகாராஜா, இது சம்பந்தமாக விசாரணை நடந்து வருவதாகவும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்றார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர். #MylaporeKapaleeswararTemple #HC
    மாணவிக்கு போலி மாற்றுச்சான்றிதழ் வழங்கிய பள்ளிக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐகோர்ட்டு, சம்பந்தப்பட்ட அலுவலரை பணி இடைநீக்கம் செய்யவும் உத்தரவிட்டது. #FakeTC #HighCourt
    சென்னை:

    கேரள மாநிலம் பாலக்காட்டில் மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றியவர் திரவியம் தினேஷ். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் கீர்த்தனா. தற்போது சென்னையில் வக்கீலாக பணிபுரியும் திரவியம் தினேஷும், அவரது மனைவியும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

    இந்நிலையில் திரவியம் தினேஷ் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தனது மனைவி பாலக்காட்டில் உள்ள புனித ரபேல்ஸ் கதீட்ரல் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்த தனது மகள் கீர்த்தனாவுக்கு சென்னை நாகல்கேணியில் உள்ள தனியார் பள்ளியில் படித்ததாக போலி மாற்றுச்சான்றிதழ் பெற்று பெங்களூருவில் உள்ள சிலிக்கான் சிட்டி பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளியில் சேர்த்துள்ளார். எனவே, அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரரின் மகள் சென்னை நாகல்கேணியில் உள்ள பள்ளியில் படிக்காத நிலையில் பள்ளி நிர்வாகம் அவருக்கு போலியாக மாற்றுச்சான்றிதழ் வழங்கியது கண்டிக்கத்தக்கது. இதற்கான ஆதாரங்கள் உள்ளதால் அந்த பள்ளியை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இருந்தாலும் அங்கு படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு அதுபோன்ற உத்தரவை பிறப்பிக்கவில்லை.

    போலி மாற்றுச்சான்றிதழ் வழங்கிய அலுவலரை பள்ளி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் பணி நீக்கம் செய்ய வேண்டும்.

    குடும்ப பிரச்சினை தம்பதியினருக்கு இடையே மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை, குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

    இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  #FakeTC #HighCourt
    ×