செய்திகள்

பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைய எதையும் விட்டு கொடுக்க தயார் - அகிலேஷ் யாதவ்

Published On 2018-09-18 05:49 GMT   |   Update On 2018-09-18 05:49 GMT
பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைய எதையும் விட்டு கொடுக்க தயார் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். #BJP #AkhileshYadav #Congress

லக்னோ:

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்து மோடி அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

ஆனாலும், எதிர்க்கட்சிகள் மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எதிர்க்கட்சி கூட்டணிக்கு யார் தலைவர்? வெற்றி பெற்றால் யார் பிரதமர்? என பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. அந்த மாநிலங்களில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவதிலும் சிக்கல் இருக்கிறது.

நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா மிகுந்த செல்வாக்கு கொண்ட கட்சியாக உள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடங்களை பாரதிய ஜனதா கூட்டணி கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

அந்த மாநிலத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக பிரதான கட்சிகளாக சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை உள்ளன.


மேலும் காங்கிரசும் ஓரளவு செல்வாக்கு கொண்ட கட்சியாக உள்ளது. இந்த கட்சிகள் தனித் தனியாக நின்றதால்தான் பாரதிய ஜனதாவுக்கு அவ்வளவு பெரிய வெற்றி கிடைத்ததாக கருதப்படுகிறது.

சமீப காலங்களில் 3 எம்.பி. தொகுதி இடைத் தேரதல் உத்தரபிரதேசத்தில் நடந்தது.

அந்த நேரத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் 3 கட்சிகளும் ஒரே அணியில் நின்றன. இதனால் 3 தொகுதிகளிலுமே இந்த கூட்டணிதான் வெற்றி பெற்றது.

இதேபோல் வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தால் மாநிலத்தின பெரும்பாலான தொகுதிகளை கைவசப்படுத்தி விடலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன.

ஆனால், இக்கூட்டணி அமைவது தொடர்பாக இன்னும் ஒருமித்த கருத்து அமையவில்லை.

சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இதுபற்றி கூறும் போது, எங்களுக்கு உரிய மரியாதை அளித்து கவுரவமான எண்ணிக்கையில்தொகுதிகளை வழங்கினால் தான் எதிர்க்கட்சி கூட்டணியில் சேருவோம் என்று கூறினார்.

இதனால் எதிர்க்கட்சி கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

மாயாவதி கருத்தை தொடர்ந்து சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் வலுவான கூட்டணிக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

அவர், லக்னோவில் நடந்த தொண்டர்கள் கூட்டத்தில் இதுபற்றி பேசியதாவது:-

2019 தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான பெரிய கூட்டணி அமைய நான் எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன்.

பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை தோற்கடிக்கப்பட வேண்டும். இதற்காக நான் தேவைப்பட்டால் 2 அடி பின்நோக்கி செல்லவும் தயாராக இருக்கிறேன். இதன் மூலம் கூட்டணி வலுவாக அமைய வேண்டும் என்பது தான் எனது ஒரே நோக்கம்.

இந்த கூட்டணி அமையும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த ஆட்சியை விரட்ட வேண்டியதற்கான நேரம் வந்து விட்டது. எதிர்க்கட்சிகள் அவர் களை விரட்ட ஒன்று சேருவது கட்டாயமாகும்.

இந்த கூட்டணிக்கு யார் தலைவர்? என்பது இப்போது முக்கியம் அல்ல. பாரதிய ஜனதாவை தோற்கடிப்பது மட்டும் தான் முக்கியம். மற்ற வி‌ஷயங்களை பின்னர் பார்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார். #BJP  #AkhileshYadav #Congress

Tags:    

Similar News