செய்திகள்

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2018-09-14 06:22 GMT   |   Update On 2018-09-14 08:06 GMT
தன் மீது பொய் வழக்கு போட்டதற்கு இழப்பீடு வேண்டி இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்ந்த வழக்கில், அவருக்கு 50 லட்ச ரூபாய் வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ISRO #ScientistNambiNarayan #SupremeCourt
புதுடெல்லி:

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன். 1994-ம் ஆண்டு இவர் விஞ்ஞானியாக இருந்த போது கிரையோ ஜெனிக் ராக்கெட் என்ஜின் தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து அவரை கேரள போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் காவலில் இருந்த போது விஞ்ஞானி நம்பி நாராயணன் துன்புறுத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நம்பி நாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவர் மீதான புகார் பற்றி விசாரிக்க நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் விசாரணை குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த குழுவில் மத்திய-மாநில அரசு பிரதிநிதிகளும் இடம் பெற்று இருந்தனர்.

மேலும் சி.பி.ஐ.யும் தனியாக விசாரணை நடத்தி நம்பி நாராயணன் மீது தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தது. விசாரணை குழுவின் அறிக்கையின் அடிப்படையில் விஞ்ஞானி நம்பி நாராயணனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே தன் மீது தவறாக வழக்குப்பதிவு செய்து சித்ரவதை செய்த குற்றத்துக்காக அப்போதைய கேரள போலீஸ் டி.ஜி.பி. சிபி மேத்யூஸ், போலீஸ் சூப்பிரண்டுகள் கே.கே. ஜோசுவா, எஸ்.விஜயன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று கூறி மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. அதன்பிறகு 3 போலீஸ் அதிகாரிகளும் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.


கேரள ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து நம்பி நாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனுதாக்கல் செய்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஓய். சந்திர சூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தியது.

இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில் கேரள போலீசாரின் தவறான வழக்கால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், முன்னாள் டி.ஜி.பி. மேத்யூஸ், சூப்பிரண்டுகள் ஜோசுவா, விஜயன் ஆகியோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். #ISRO #ScientistNambiNarayan #SupremeCourt
Tags:    

Similar News