செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139.99 அடியாக தொடரலாம்- உச்ச நீதிமன்றம் அனுமதி

Published On 2018-08-24 07:03 GMT   |   Update On 2018-08-24 07:03 GMT
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை வரும் 31-ம் தேதி வரை 139.99 அடியாக தொடரலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. #MullaperiyarDam #KeralaFloods #SC
புதுடெல்லி:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அணை பலவீனமாக இருப்பதாக மீண்டும் கூறியுள்ள கேரள அரசு, நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது.  இவ்வழக்கில் நேற்று பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தது. அதில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டதும் வெள்ள சேதம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் என்று கூறியிருந்தது. இதற்கு தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது.

இதையடுத்து அணையின் நீர்மட்டத்தை குறைப்பது தொடர்பான வாதம் நடைபெற்றது. அப்போது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்போதைய நிலையிலேயே தொடர அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதாவது ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அணையில் 139.99 அடி வரை நீர் தேக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும், அணையின் நீர்மட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான துணைக்குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 139.99 அடியாக பராமரிக்கலாம் என துணைக்குழு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. #MullaperiyarDam #KeralaFloods 
Tags:    

Similar News