செய்திகள்

கேரளா வெள்ள நிலவரம் குறித்து கவர்னர், முதல்வரிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்

Published On 2018-08-19 09:05 GMT   |   Update On 2018-08-19 09:05 GMT
கேரள மாநிலத்தின் தற்போதைய வெள்ள நிலைமை மற்றும் பாதிப்புகள் தொடர்பாக அம்மாநில கவர்னர் மற்றும் முதல் மந்திரியிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார். #KeralaFloods
புதுடெல்லி:

கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி சுமார் 300 பேர் பலியாகியுள்ளனர். பல மாவட்டங்களை சூழ்ந்துள்ள பெருவெள்ளத்தால் பல லட்சம் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சுமார் 4 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நேற்று கேரளாவுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்தவாறு பார்வையிட்டார். மாநில அரசின் நிவாரணப் பணிகளுக்கு உடனடியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் அவர் உத்தரவிட்டார்.


இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் இருந்து கேரள கவர்னர் சதாசிவம் மற்றும் முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். தற்போதைய வெள்ள நிலவரம் மற்றும் பாதிப்புகள் தொடர்பாக அவர்களிடம் கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில் ’கேரள மக்களுக்கு ஒட்டுமொத்த இந்தியர்களும்  பக்கபலமாக இருப்பார்கள் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மத்திய அரசும் கேரள அரசும் ஒன்றிணைந்து உத்வேகத்துடன் செயலாற்றி வருவது தொடர்பாக தனது மனநிறைவை அவர் வெளிப்படுத்தியதுடன் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மத்திய - மாநில அரசு அதிகாரிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புணர்வுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. #keralaflood #presidentRamnathkovind #keralafloodsituation #KeralaFloods #KeralaReliefFund
Tags:    

Similar News