செய்திகள்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published On 2018-08-06 07:03 GMT   |   Update On 2018-08-06 07:03 GMT
ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. #SC #Article35A
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டப்பிரிவு 35ஏ செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி காஷ்மீர் மக்கள் நிரந்தர குடிமக்கள் அந்தஸ்தை பெறுவதுடன், வெளிமாநில மக்கள் யாரும் இங்கு அசையா சொத்துக்களை வாங்க முடியாது. மாநிலத்தின் நிரந்தர குடிமக்களை வரையறுத்து, அவர்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்குவது தொடர்பாக மாநில சட்டமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்றிக்கொள்ள இந்த 35ஏ சட்டப்பிரிவு அதிகாரம் அளிக்கிறது.

பிற மாநில மக்கள் இங்கு சொத்து வாங்க முடியாது என்று தடை விதிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிப்பதாக பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக விசாரணை நடத்தி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளில் நீதிபதி சந்திரசூட் வராததால், விசாரணை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் முடிவு செய்யும் என்றும், ஒரு நீதிபதி வராததால் வழக்கை ஒத்திவைப்பதாகவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார். #SC #Article35A
Tags:    

Similar News