செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் சசிதரூர் பேசுகிறார்- சுப்பிரமணியசுவாமி கண்டனம்

Published On 2018-07-13 07:43 GMT   |   Update On 2018-07-13 07:43 GMT
இந்து பாகிஸ்தானாக இந்தியா மாறும் என்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் சசிதரூர் பேசுகிறார் என சுப்பிரமணியன்சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #ShashiTharoor #HinduPakistan
புதுடெல்லி:

திருவனந்தபுரம் பாராளு மன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூர், 2 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்று பேசினார்.

அவர் பேசுகையில், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் நமது நாட்டின் ஜனநாயகம் சிதைந்து விடும். பாகிஸ்தானை போல சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்காத புதிய நாடாக இந்தியா உருவாகும்.

காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல், மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் எதற்காக போராடி சுதந்திரம் பெற்றார்களோ, அது இல்லாமல் போய் விடும். மொத்தத்தில் இந்து பாகிஸ்தானாக இந்தியா மாறி விடும் என்றார்.

சசிதரூரின் பேச்சு ஊடகங்களில் வெளியானதும் பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பிட் பிட்ரா கூறும்போது, இந்திய ஜனநாயகத்தின் மீதும், இந்துக்கள் மீதும் சசிதரூர் மிகப்பெரும் தாக்குதலை நடத்தி உள்ளார். நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் மதிப்பை குறைத்து விட்டார். பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் மீது வெறுப்புணர்வு அதிகமானதால் காங்கிரஸ் தலைவர்கள் இவ்வாறு பேசி வருகிறார்கள். இதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன்சுவாமியும், சசிதரூர் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணமடைந்ததால் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, சசிதரூருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சசிதரூர் மீது பிரதமர் மோடி இரக்கம் காட்ட வேண்டும். அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதா? என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


பாரதிய ஜனதா தலைவர்களின் கண்டன பேச்சுக்கு சசிதரூர் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என சசிதரூர் கூறி உள்ளார். இந்து ராஜ்ஜியம் உருவாக்குவோம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறி வருகிறது. அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ கொள்கையும் அதுதான் என்று கூறுகிறது.

ஆர்.எஸ்.எஸ். முன்னோடிகளில் ஒருவரான தீன்தயாள் உபாத்தியாயா இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காதவர். இப்படிப்பட்ட தீன்தயாள் உபாத்தியாயாவின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் படிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறி வருகிறார்.

இவர்கள் இந்து மக்களுக்காகவே அரசியல் சட்டமும், நாடும் உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்கள். இப்படிப்பட்டவர்களின் செயல்பாட்டை நான், சுட்டிக்காட்டியதில் என்ன தவறு இருக்கிறது? இதற்காகத்தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

சசிதரூரின் இந்து பாகிஸ்தான் பேச்சு குறித்து காங்கிரசும் கருத்து தெரிவித்துள்ளது. கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் கர்ஜேவாலா கூறும் போது, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பும், நெறிமுறைகளும் எந்தவித சவால்களுக்கும் இடம் அளிக்காத வகையில் உறுதியாக உள்ளது.

நமது கொள்கைகள் பாகிஸ்தானின் பிரிவினைவாத போக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் வரலாற்று ரீதியாக நமக்கு இருக்கும் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சியின் வெறுப்பு உணர்வு கொள்கைகளை எதிர்த்து பேசும்போது, வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதுபோல காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷீர்ஜில் கூறும் போது, மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாகிஸ்தானை போல மோசமான நிலைக்கு செல்ல இந்திய ஜனநாயகம் அனுமதிக்காது.

காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டும் போது யோசித்து கவனமாக வார்த்தைகளை தேர்வு செய்து பேச வேண்டும் என்று கூறினார். #ShashiTharoor #HinduPakistan
Tags:    

Similar News