செய்திகள்

மெகபூபா முப்தியை பாஜக கைவிட்டது ஏன்? - அமித் ஷா விளக்கம்

Published On 2018-06-23 13:37 GMT   |   Update On 2018-06-23 13:37 GMT
மெகபூபா முப்தியின் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க. விலக்கி கொண்டது ஏன்? என்பது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா இன்று விளக்கம் அளித்துள்ளார். #AmitShah #AmitShahinjammu
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா முதன்முறையாக இன்று இம்மாநிலத்துக்கு வந்துள்ளார்.

ஜம்மு விமான நிலையத்தில் அவருக்கு மேளதாளம் முழங்க பா.ஜ.க. தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மாநில இளைஞர் அணியினர் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுக்க விமான நிலையத்தில் இருந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அமித் ஷா, ஜன சங்க நிறுவன தலைவர் சியாமா பிரசாத் மூகர்ஜியின் நினைவுநாளையொட்டி மரியாதை செலுத்தினார்.

பின்னர், கட்சி பிரமுகர்களுடன் மாநில அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்திய அமித் ஷா, இன்று மாலை ஜம்மு நகரில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிக்ளின் குடும்ப ஆட்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த இரு குடும்ப கட்சிகள் இந்த மாநிலத்துக்கு செய்யாத பலவற்றை பா.ஜ.க. செய்துள்ளது,

பஷ்மினா பகுதி வளர்ச்சிக்கு 40 கோடி ரூபாயும், பாம்போர் பகுதியின் வளர்ச்சிக்கு 45 கோடி ரூபாயும் நாங்கள் ஒதுக்கீடு செய்தோம். கடந்த ஆண்டில் நான் காஷ்மீருக்கு வந்தபோது இங்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. அந்த ஆட்சிக்கான ஆதரவை நாங்கள் விலக்கி கொண்டதால் இன்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

தங்களது ஆட்சி கவிழ்ந்தால் அரசியல் கட்சிகள் கவலை அடையும். ஆனால், பாரத் மாதா கி ஜெய் என்று கூறும் மனப்பக்குவம் பா.ஜ.க.வுக்கு மட்டுமே உண்டு. இது எங்களின் தேச பக்திக்கான அடையாளமாகும்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒன்றிணைந்த சமமான வளர்ச்சி ஏற்படவில்லை என்றால் இங்கு பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் பலனில்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்தும் ஜம்மு மற்றும் லடாக் விவகாரத்தில் மாநில அரசு பாரபட்சம் காட்டி வந்தது. இதனால்தான், கூட்டணி ஆட்சியில் இருந்து விலகி எதிர்கட்சியாக நின்று குரல் எழுப்ப நாங்கள் தீர்மானித்தோம்.

இவ்வாறு அவர் கூறினார். #AmitShah #AmitShahinjammu 
Tags:    

Similar News