செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல் - 3374 பேர் வேட்புமனு தாக்கல்

Published On 2018-04-25 12:11 GMT   |   Update On 2018-04-25 12:11 GMT
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 12-ம் தேதி நடைபெறும் தேர்தலில் 259 பெண்கள் உள்பட மொத்தம் 3374 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். #KarnatakaElections
பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடைபெற்றுவரும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற 27-ம் தேதி கடைசிநாள் என்னும் நிலையில் இந்த தேர்தலில் 259 பெண்கள் உள்பட மொத்தம் 3374 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

பா.ஜ.க. சார்பில் 19 பெண்கள் உள்பட 284 பேரும், காங்கிரஸ் சார்பில் 16 பெண்கள் உள்பட 250 பேரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 16 பெண்கள் உள்பட 233 பேரும், சுயேட்சைகளாக 1673 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக கர்நாடக மாநில தேர்தல் கமிஷன் இன்று தெரிவித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 744 பெண்கள் உள்பட மொத்தம் 3692 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். ஆனால், வாபஸ் மற்றும் பரிசீலனைக்கு பின்னர் 2948 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பு முடிவுகளின்படி, மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 91 இடங்களிலும், பா.ஜ.க. 89 இடங்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 40 இடங்களும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது.  #tamilnews #KarnatakaElections
Tags:    

Similar News