செய்திகள்

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி 27-ந்தேதி சீனா செல்கிறார்

Published On 2018-04-23 00:04 GMT   |   Update On 2018-04-23 00:04 GMT
பிரதமர் மோடி 4-வது முறையாக 2 நாள் சுற்றுப்பயணமாக 27-ந்தேதி சீனா செல்கிறார்.
பீஜிங்:

பிரதமர் நரேந்திர மோடி, தான் பிரதமராக பதவி ஏற்ற பிறகு இதுவரை 3 தடவை சீனாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், 4-வது தடவையாக அவர் 27-ந்தேதி சீனாவுக்கு செல்கிறார்.

இத்தகவலை சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி தெரிவித்தார்.

8 நாடுகள் இடம்பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், நேற்றுமுன்தினம் அங்கு சென்றார். நேற்று அவர் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யியை சந்தித்து பேசினார். இருதரப்பு பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

பின்னர், இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, வாங் யி கூறியதாவது:-

இந்தியா-சீனா உறவு நன்றாக மேம்பட்டுள்ளது. சமீபத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இருவரும் ஆழமான கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட்டனர். இருநாட்டு உறவை மேம்படுத்த ஒப்புக்கொண்டனர். அதை அமல்படுத்த நாம் கடுமையாக பாடுபட வேண்டும்.

சீன அதிபரின் அழைப்பின்பேரில், பிரதமர் மோடி 27 மற்றும் 28-ந்தேதிகளில் சீனாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். வுகன் நகரில், இருவரும் சந்தித்துப் பேசுகிறார்கள். இருதரப்பு உறவில் புதிய முன்னுதாரணத்தை உருவாக்க இருவரும் பாடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுஷ்மா சுவராஜ் கூறுகையில், “டோக்லாம் பிரச்சினைக்கு பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வதற்கான நாது லா பாதை மூடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு நாது லா பாதை வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கும். அதற்கு சீனா ஒத்துழைப்பு தர சம்மதித்துள்ளது” என்றார். 
Tags:    

Similar News