செய்திகள்

அமித்ஷாவின் கடிதம் பொய் மூட்டையாக உள்ளது - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

Published On 2018-03-24 19:20 GMT   |   Update On 2018-03-24 19:20 GMT
ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கியதாக கூறிய அமித்ஷாவின் கடிதம் முழுவதும் பொய் மூட்டையாக உள்ளது என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
அமராவதி:

ஆந்திர மாநிலத்திக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காததை கண்டிக்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி சமீபத்தில் விலகியது.

இதுதொடர்பாக, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவிற்கு பா.ஜ.க. தலைவர் அமித்ஷா எழுதிய கடிதத்தில், மத்தியில் பதவியேற்றதும், 3 ஆண்டுகளில் மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக 1,050 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், மாநில அரசால் 12 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. எஞ்சியுள்ள 88 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கியதாக கூறிய அமித்ஷாவின் கடிதம் முழுவதும் பொய் மூட்டையாக உள்ளது என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, ஆந்திர சட்டசபையில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியதாவது:

பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தனது கடிதத்தில் ஆந்திராவுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியதாகவும், அதனை நாங்கள் பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார். நீங்கள் ஏன் பொய்யை பரப்புகிறீர்கள்? அவரது கடிதம் முழுவதும் பொய் மூட்டையாக உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் பொய்.

மாநிலத்தின் நலனுக்காக தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தோம். அரசியல் காரணத்திற்காக கூட்டணியை முறித்ததாக அமித்ஷா கூறியுள்ளார். நாங்கள் மக்கள் விருப்பத்திற்காக தான் கூட்டணியிலிருந்து வெளியேறினோம். நாங்கள் ஒன்றும் ஒரே இரவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிடவில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News