செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவால் மீது நிதின் கட்காரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கு வாபஸ்

Published On 2018-03-19 10:23 GMT   |   Update On 2018-03-19 10:23 GMT
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது மத்திய மந்திரி நிதின் கட்காரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கு இன்று சமரசத்தின் அடிப்படையில் வாபஸ் பெறப்பட்டது. #Defamationcase #Kejriwal #NitinGadkari
புதுடெல்லி:

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மிகப்பெரிய ஊழல்வாதிகள் என்றொரு பட்டியலை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டிருந்தார். அதில் பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்காரியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இதனால் தனது நன்மதிப்புக்கு களங்கம் விளைவித்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது டெல்லி கோர்ட்டில் நிதின் கட்காரி மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.



இதேபோல், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். தனக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடாக அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். பின்னர், அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டதையடுத்து கெஜ்ரிவாலுக்கு பத்தாயிரம் அபராதம் விதித்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதற்கிடையில், பஞ்சாப் மாநில முன்னாள் முதல் மந்திரி பிக்ரம் சிங் மஜிதியாவை போதைப்பொருள் கடத்தல்காரர் என்று சமீபத்தில் கெஜ்ரிவால் கூறி இருந்தார். பின்னர் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து தனது கருத்துக்கு கெஜ்ரிவால் வருத்தம் தெரிவித்ததுடன், மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது மத்திய மந்திரி நிதின் கட்காரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கு இன்று சமரசத்தின் அடிப்படையில் வாபஸ் பெறப்பட்டது.

இதுதொடர்பாக, நிதின் கட்காரிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் எழுதிய கடிதத்தில் ‘உங்களுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எனக்கு காழ்ப்புணர்ச்சி ஏதுமில்லை. எனவே, உங்களை பற்றி தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெறுவதுடன் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நடந்தவற்றை புறந்தள்ளிவிட்டு கோர்ட் நடவடிக்கைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வருவோம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, மானநஷ்ட வழக்கை திரும்பப் பெறுவதாக கட்காரியும், கெஜ்ரிவாலும் இன்று கோர்ட்டில் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளனர். #Defamationcase #Kejriwal #NitinGadkari #tamilnews
 
Tags:    

Similar News