search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதின் கட்காரி"

    • நெடுஞ்சாலைகளில் சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள், தரத்தில் சமரசம் செய்யாமல் கட்டுமான செலவைக் குறைக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

    தற்போது நெடுஞ்சாலை கட்டணங்கள் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி சுங்கச்சாவடிகளுக்கு பதில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் நெடுஞ்சாலை கட்டணங்கள் வசூலிக்கும் புதிய முறை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களை நிறுத்தாமல் தானியங்கி முறையில் கட்டணத்தை வசூலிக்கும் வகையில் நவீன கேமராக்களை (ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கேமரா) அமைக்கும் திட்டமும் ஆய்வு செய்யப்பட்டது.

    கடந்த 2018-19-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் 8 நிமிடங்கள் என்று இருந்தது.

    பின்னர் 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளில் 'பாஸ்டேக்' முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் வாகனங்களின் காத்திருப்பு நேரம் 47 வினாடிகளாக குறைக்கப்பட்டது. இருப்பினும் 'பீக் ஹவர்ஸ்' சமயங்களில் சுங்கச்சாவடிகளில் இன்னும் சில தாமதங்கள் உள்ளன.

    நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள், தரத்தில் சமரசம் செய்யாமல் கட்டுமான செலவைக் குறைக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

    • மழை சேதத்தால் நெடுஞ்சாலைகளில் குண்டு-குழிகள் உருவாவதால் அது குறித்து கவனம் செலுத்தப்படும்.
    • தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தேங்குவது குறித்து புகார்கள் வருகின்றன.

    புதுடெல்லி:

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

    இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளை குண்டு-குழி இல்லாதது ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான கொள்கை உருவாக்கப்படுகிறது.

    நெடுஞ்சாலைகளில் பள்ளங்கள் உருவாவதை தவிர்க்கும் வகையில், ஒப்பந்ததாரர்களின் செயல்திறன் அடிப்படையிலும், குறுகிய கால அளவிலும் ஒப்பந்தங்கள் அளிப்பதில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உறுதியாக உள்ளது.

    கட்டி, இயக்கி, மாற்றம் செய்யும் முறையில் நெடுஞ்சாலைகள் நன்றாக பராமரிக்கப்படுவதால் அந்த முறை விரும்பப்படுகிறது. மழை சேதத்தால் நெடுஞ்சாலைகளில் குண்டு-குழிகள் உருவாவதால் அது குறித்து கவனம் செலுத்தப்படும்.

    தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தேங்குவது குறித்து புகார்கள் வருகின்றன. அதுதொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    நகராட்சி கழிவுகள் போன்றவற்றை சாலை கட்டுமானத்தில் பயன்படுத்துவது தொடர்பாக மற்றொரு தேசிய கொள்கையை உருவாக்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. கழிவுகளே தற்போது பெரும் பிரச்சினையாக உள்ள சூழலில், இது எல்லோருக்கும் நன்மை பயப்பதாக அமையும். வரும் 2070-ம் ஆண்டு பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றம் என்ற பிரதமர் மோடியின் இலக்கை நனவாக்கவும் இது உதவும்.

    பிரதமர் மோடி துவங்கியுள்ள 'தூய்மையே சேவை' திட்டத்தின்கீழ் பல்வேறு பசுமை முயற்சிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டீசல் எரிபொருளுக்கு எதிரானவன் அல்ல, டீசல் வாகனங்களுக்கு நாங்கள் எந்த வரியும் விதிக்கப்போவதில்லை.
    • மாசுபாட்டைக் குறைக்க மாற்று எரிபொருளில் கவனம் செலுத்துவதே சிறந்த வழி என்பதை தொழில்துறைக்கு பரிந்துரைக்கிறேன்.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த 12-ந்தேதி நடைபெற்ற மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் "காற்று மாசினை குறைக்கும் வகையில் டீசல் என்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்" என கூறினார். இது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரிவிதிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என நிதின் கட்காரி விளக்கமளித்தார்.

    இந்த நிலையில் டெல்லியில் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த நிதின் கட்காரி இந்த விவகாரம் குறித்து மீண்டும் விளக்கமளித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "நான் டீசல் எரிபொருளுக்கு எதிரானவன் அல்ல, டீசல் வாகனங்களுக்கு நாங்கள் எந்த வரியும் விதிக்கப்போவதில்லை. மாசுபாட்டின் பார்வையில், டீசல் மிகவும் ஆபத்தானது. அது உண்மையில் நாட்டில் சுகாதார பிரச்சினையை ஏற்படுத்துகிறது. எனவே மாசுபாட்டைக் குறைக்க மாற்று எரிபொருளில் கவனம் செலுத்துவதே சிறந்த வழி என்பதை தொழில்துறைக்கு பரிந்துரைக்கிறேன்" என கூறினார். 

    • டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், மாசு வரி என்ற பெயரில் டீசல் வாகனங்களுக்கு கூடுதல் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.

    • கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது.
    • கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

    சென்னை:

    சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி விரைவாக துறைமுகத்திற்கு சென்று வர இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கருதப்பட்டது.

    இந்தநிலையில் 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்படும் எனக்கூறி ஜெயலலிதா இந்த திட்டத்தை முடக்கினார். பின்னர் 10 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் இருந்தது.

    கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. இதையடுத்து மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது.

    இத்திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளால் உயர்மட்ட சாலை அமைக்க தமிழ்நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் பணிகள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால் தாமதமானது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இத்திட்டம் முதலில் ரூ.3,204 கோடியில் செயல்படுத்த முன்மொழியப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட மேம்பாலம் இரண்டு நிலைகளாக (டபுள் டெக்கர்) மறுவடிவமைப்பு செய்யப்பட்டதால் பின்னர் ரூ.5,721.33 கோடியாக மாற்றப்பட்டது. மேம்பால பணிகள் 4 பகுதிகளாக பிரித்து செயல்படுத்தப்படுகிறது. மேம்பாலத்தின் மொத்த நீளம் 20.565 கி.மீ. ஆகும். இந்த சாலைக்கு சுற்றுச்சூழல், ரெயில்வே துறை, கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதி இரட்டை தளமாக அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்த மத்திய மந்திரி கட்கரி, அனைத்து நெடுஞ்சாலைப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறுகையில், மேம்பாலம் கட்டுவதற்கான ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டுள்ளார். ஆனால் இன்னும் வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பிக்காததால் பணிக்கான உத்தரவு இன்னும் வழங்கப்படவில்லை. உத்தரவாதத்தை சமர்ப்பித்ததும், வேலை தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

    மேம்பாலத்தின் ஒரு பகுதி டபுள் டெக்கராக இருக்கும். துறைமுகத்தை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மேலே இருக்கும் பாலத்தை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

    மேல் பாலத்தில் மற்ற வாகனங்கள் உள்ளே நுழையவோ வெளியேறவோ வழிகள் இருக்காது.

    முன்னதாக, நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் துறைமுகம் மற்றும் பாலத்தின் முடிவில் மட்டுமே இருக்கும்படி முன்மொழியப்பட்டது. இப்போது, 13 பகுதிகளில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் வழிகள் வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த மேம்பாலம் துறைமுக வளாகத்தில் தொடங்கி, கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் கரையில் தொடரும். தொடர்ந்து மதுரவாயல் வரை தற்போதைய பூந்தமல்லி நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டு மேம்பாலம் அமைய உள்ளது. சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம் வழியாக மேம்பாலம் செல்லும். மேம்பாலத்திற்கான நிலத்தை அரசு ஏற்கனவே கையகப்படுத்தியுள்ளது.

    சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் இருந்து இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பறக்கும் சாலை திட்டம் முடிவுக்கு வரும்போது சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

    • பா.ஜனதா மூன்று முக்கிய பணிகளை வரையறுத்துள்ளது.
    • இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது.

    நாக்பூர் :

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

    பா.ஜனதா மூன்று முக்கிய பணிகளை வரையறுத்துள்ளது. அதில் முதலாவது தேசியவாதம். இது எங்கள் கட்சியின் ஆன்மா. நாட்டின் எல்லை பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் நாடு பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வலுபெற வேண்டும். இரண்டாவது நல்லாட்சி மற்றும் வளர்ச்சியுடன் முன்னேறி சுயசார்புடைய நாடாக மாற வேண்டும் என்பது பா.ஜனதாவின் விருப்பம்.

    அதேபோல சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கிய மற்றும் தலித்துகளுக்கு சேவை செய்வதே கட்சியின் 3-வது நோக்கம்.இந்த நாடு தனி நபருக்கோ, ஒரு சமூகத்திற்கோ, ஒரு மதத்திற்கோ சொந்தமானது அல்ல. இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. நீதித்துறை, நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் ஊடகம் ஆகிய 4 தூண்களில் நிற்கும் ஜனநாயகத்தின் தாய் நாங்கள்.

    எங்களுக்கு அரசியலமைப்பு என்பது பகவத் கீதை, பைபிள் மற்றும் குரான் போன்றதுபோன்றது. அதன் கொள்கைப்படி நமது சமுதாயத்தை வடிவமைத்தால், அனைவரும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்க முடியும். ஒவ்வொரு தரப்பினரையும் மகிழ்ச்சியடைய செய்ய நாங்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.
    • பா.ஜ.க.வை வீழ்த்தி விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வென்று ஆட்சியைப் பிடித்து, 'ஹாட்ரிக்' அடிக்க பா.ஜ.க. முனைப்பாக உள்ளது.

    ஆனால் இந்த முறை பா.ஜ.க.வை வீழ்த்தி விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் இணைத்துப் போட்டியிடச்செய்யும் முயற்சியில் ஐக்கிய ஜனதாதளம் தலைவரான பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார்

    இந்த நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து மந்திரியுமான நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    2024 மக்களவை தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    நாங்கள் நல்ல பணியாற்றி உள்ளோம். பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் அரசு அமைப்போம். நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் எங்களை தேர்ந்தெடுப்பார்கள்.

    இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினைகள் பட்டினி, ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதா மூத்த தலைவர் நிதின் கட்காரி.
    • நிதின் கட்காரியின் வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    மும்பை :

    மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் பா.ஜனதா மூத்த தலைவர் நிதின் கட்காரி. இவரது சொந்த ஊர் மராட்டிய மாநிலம் நாக்பூர் ஆகும். நாக்பூரில் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளது.

    இந்த நிலையில் 2 தடவை நாக்பூர் சவுக், காம்ளா பகுதியில் உள்ள நிதின் கட்காரியின் அலுவலகத்துக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் 2 முறை போன் செய்தபோதும் மத்திய மந்திரி நிதின் கட்காரியை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். மேலும் அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் எனவும் மிரட்டினார்.

    மிரட்டல் குறித்து அலுவலக ஊழியர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து நாக்பூரில் உள்ள நிதின் கட்காரியின் வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நாக்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தொலைபேசி மூலம் மூன்று முறை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
    • மிரட்டல் விடுத்த நபரின் பேச்சு பகுப்பாய்வு செய்யப்பட்டு, அவரை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் காம்ரா சவுக் பகுதியில் மத்திய மந்திரி நிதின் கட்காரியின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலையில் தொலைபேசி மூலம் மூன்று முறை தொடர்பு கொண்டு பேசிய ஒரு நபர், மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆபீசை குண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் கூறி உள்ளார். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி நிதின் கட்காரியின் அலுவலகத்தில் இருந்து காவல்துறைக்கு புகார் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மிரட்டல் விடுத்த நபரின் பேச்சு பகுப்பாய்வு செய்யப்பட்டு, அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

    • உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம்.
    • ஏழை, பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து உள்ளது.

    மும்பை :

    மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று நாக்பூரில் பாரத் விகாஸ் பரிஷத் சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறோம். உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். நாம் ஏழை மக்கள் தொகையை கொண்ட பணக்கார நாடு. ஏழை மக்கள் பட்டினி, வேலையின்மை, வறுமை, பணவீக்கம், சாதி பாகுபாடு, தீண்டாமை போன்றவற்றை சந்தித்து வருகின்றனர்.

    இது சமுதாய வளர்ச்சிக்கு நல்லதல்ல. சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

    ஏழை, பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து உள்ளது. சமூக ஏற்றத்தாழ்வை போல, பொருளாதார ஏற்றத்தாழ்வும் அதிகரித்து உள்ளது. ஏழை, பணக்காரர் இடையேயான இடைவெளியை குறைக்க கல்வி, சுகாதாரம், சேவை துறைகளில் வேலை செய்ய வேண்டியது உள்ளது.

    பாரத் விகாஸ் பரிஷத்தின் நோக்கம் தெளிவானது. ஆனால் சமூக கடமை, உணர்வுடன் நாம் எப்படி வெவ்வேறு வகையான பிரிவுகளில் பணியாற்ற போகிறோம் என்பது தான் சவாலானது. நாம் நமது லட்சியத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். எனவே அதை சாதிக்க நமது வேகத்தை அதிகரிக்க வேண்டும். 21-ம் நூற்றாண்டு இந்தியாவுடையதாக இருக்கும் என சுவாமி விவேகானந்தர் கூறினார். எனவே நாட்டின் வளர்ச்சிக்காக எல்லோரும் அவர்களது பங்களிப்பை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ‘பிரதமர் கதிசக்தி’ திட்டத்தால், திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
    • இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள்.

    புதுடெல்லி :

    டெல்லியில், இந்தோ-அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார்.

    அதில் அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் பொது போக்குவரத்து வாகனங்கள், மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அந்த மின்சார வாகனங்களுக்கு சோலார் மின்சாரம், காற்றாலை மின்சாரம் ஆகியவை அடிப்படையிலான சார்ஜ் ஏற்றும் மையங்கள் உருவாக்குவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

    அதைத்தொடர்ந்து, சோலார் மின்சார சப்ளையுடன் நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறோம். அந்த சாலைகளில், ஆகாய மார்க்கமாக மின்வழிப்பாதை செல்லும். அத்தகைய சாலைகள் வழியாக செல்லும் கனரக லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள், மின்சார 'சார்ஜ்' ஏற்றிக் கொள்ளலாம்.

    சுங்க சாவடிகளையும் சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி இயக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். நன்கு வடிவமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளால் பொருளாதார நடவடிக்கைகள் பெருகும். வர்த்தகம் அதிகரிப்பதுடன், வேலைவாய்ப்பும் பெருகும்.

    'பிரதமர் கதிசக்தி' திட்டத்தால், திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது. தளவாட செலவுகள் குறைகிறது.

    நெடுஞ்சாலைகள் அமைக்கும்போதும், விரிவாக்கம் செய்யும்போதும் மரக்கன்று நடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். சுமார் 3 கோடி மரக்கன்றுகளை தேசிய நெடுஞ்சாலைகளில் நடப்போகிறோம்.

    தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது, இதுவரை 27 ஆயிரம் மரங்களை அப்புறப்படுத்தி, வெற்றிகரமாக வேறு இடங்களில் நட்டு வைத்துள்ளோம்.

    இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள். இந்திய தளவாடங்கள் துறையில் முதலீடு செய்ய அமெரிக்க தனியார் முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சுங்கச்சாவடிகளால் போக்குவரத்து நெரிசல் போன்ற பல பிரச்சனைகள் உருவாகின்றன.
    • நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை மாற்றுவதற்கான புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

    புதுடெல்லி:

    புதிய அமைப்பின் மூலம் நகர எல்லையில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    மேலும் கிருஷ்ணகிரி நகரில் 7 கிமீ தொலைவில் சுங்கச்சாவடிகள் இருப்பதை நியாயப்படுத்த முடியாதும், மக்கள் சுங்கக் கட்டணம் செலுத்த நேரிடுவது முற்றிலும் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

    'சுங்கச்சாவடிகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்ற பல பிரச்சனைகள் உருவாகின்றன. அவற்றை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது. நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை மாற்றுவதற்கான புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அடுத்த ஆறு மாதங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்' என்றும் நிதின் கட்காரி தெரிவித்தார்.

    ×