செய்திகள்

மத்திய அரசு நடத்தும் லோக்பால் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் மறுப்பு

Published On 2018-03-01 06:47 GMT   |   Update On 2018-03-01 06:47 GMT
லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழு கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்க போவதில்லை என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:

லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக விவாதிப்பதற்கான லோக்பால் தேர்வுக் குழுக் கூட்டம் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. லோக்பால் தேர்வுக் குழுவில் பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் நீதிபதி, மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அரசு ஊழியர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தின்படி மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும்.



அந்த அமைப்புகளின் உறுப்பினர்களை லோக்பால் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும். மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவராக இல்லை என்பதால் தேர்வுக்குழுவில் இடம்பெறவில்லை. எனினும் இன்றைய கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அவர் அழைக்கப்பட்டிருந்தார். 

லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் தான் பங்கேற்க போவதில்லை என மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், ‘லோக்பால் தொடர்பாக மத்திய அரசு நடத்தும் தேர்வு குழு கூட்டமானது, எதிர்கட்சியினரும் பங்கேற்றனர் என்பதை தெரிவிக்கும் ஒரு  கண்துடைப்பு நாடகம் போல் தோன்றுகிறது. எனவே இந்த கூட்டத்தில் நான் பங்கேற்க போவதில்லை’ என தெரிவித்துள்ளார். #tamilnews
Tags:    

Similar News