செய்திகள்

கோவா முதல்வருக்கு தொடர் சிகிச்சை - அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு

Published On 2018-02-20 04:45 GMT   |   Update On 2018-02-20 04:45 GMT
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவார் என்று துணை சபாநாயகர் தெரிவித்தார்.
பனாஜி:

கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 15-ம் தேதி மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வதந்தி பரவியது. இதனை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தது.

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து கோவா சட்டமன்ற துணை சபாநாயகரும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான மைக்கேல் லாபோ சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் விளக்கம் அளித்தார்.

அப்போது, ‘மும்பை லீலாவதி மருத்துவமனையில் முதல்வருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எங்களால் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வோம். தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவார்’ என்றார் லாபோ.

முதல்வர் பாரிக்கர் மருத்துவமனையில் இருப்பதால் கோவா மாநில பட்ஜெட்டை அமைச்சர் சுதின் தவாலிகர் நாளை மறுநாள் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews
Tags:    

Similar News