செய்திகள்

இந்திரா காந்தி வழியில் ராகுல் காந்தி

Published On 2018-02-15 05:23 GMT   |   Update On 2018-02-15 05:55 GMT
இந்திரா காந்தியின் வழியில் தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொண்டர்கள் எளிதாக அணுகக்கூடிய தலைவராக தன்னை மாற்றிக் கொண்டு வருகிறார்.
புதுடெல்லி:

இந்திரா காந்தி மற்றும் அவருக்கு முந்தைய காங்கிரஸ் தலைவர்கள் கடந்த காலங்களில் ஜனதா தர்பார் என்ற நிகழ்ச்சியின் மூலம் காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். அவருக்கு பிறகு ஜனதா தர்பார் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

இந்திரா காந்தியின் வழியில் தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொண்டர்கள் எளிதாக அணுகக்கூடிய தலைவராக தன்னை மாற்றிக் கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார்.

இதற்காக டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு ராகுல் காந்தி நேற்று காலை வந்தார். அங்கு உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப், பீகார், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த கட்சித்தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கட்சியின் வளர்ச்சி பற்றி கலந்துரையாடினார். சுமார் 1½ மணி நேரம் இந்த கலந்துரையாடல் நீடித்தது.

அதன் பிறகு கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள புல்வெளியில் நீண்ட நேரம் உலாவிக் கொண்டிருந்த அவர் பின்னர் புதுப்பிக்கப்பட்டுள்ள தனது அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார்.



காங்கிரஸ் தலைமையகத்தில் உள்ள கட்சித்தலைவர் அலுவலகம் கடந்த சில ஆண்டுகளாக பூட்டிக் கிடந்தது. அங்கு நடைபெறும் உயர் நிலைக் கூட்டங்களுக்கு கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வரும் போது மட்டும் அந்த அலுவலகம் திறக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சித்தலைவர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News