செய்திகள்

தமிழ்நாட்டில் நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு: மத்திய அரசு பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-02-08 04:09 GMT   |   Update On 2018-02-08 04:09 GMT
தமிழ்நாட்டில் நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரும் மனுக்கள் மீது 2 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி:

மத்திய வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகம் 2011-12 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளில் இந்தோனேசியாவில் இருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் குறித்து மேற்கொண்ட ஆய்வில் தரம் அதிகமாக இருப்பதாக கூறி தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடிக்கு மோசடி நடந்திருப்பதாக கண்டறிந்தது.

இதன் அடிப்படையில் சென்னையை சேர்ந்த கடலோர மின்சக்தி நிறுவனத்தின் நிர்வாகி அகமது ஏ.ஆர்.புகாரி, தேசிய மின்சக்தி கழகத்தின் அடையாளம் காணப்படாத அதிகாரிகள், உலோகங்கள் மற்றும் கனிம வர்த்தக கழகம், ஆரவல்லி மின்சக்தி கழகம் ஆகியவற்றின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

ஏற்கனவே இது தொடர்பாக பொதுநல வழக்கு களுக்கான மையம் மற்றும் காமன் காஸ் ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், இந்த மனுதாரர்களால், தமிழக மின் உற்பத்தி நிறுவனங்கள் தனியாரிடம் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் ரூ.2,177 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் மீதும் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கூடுதலாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன், “இந்த முறைகேட்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. எனவே, கோர்ட்டின் கண்காணிப்பில் நாடு முழுவதும் உள்ள நிலக்கரி இறக்குமதி செய்த மின்சக்தி உற்பத்தி நிறுவனங்கள் மீது சிறப்பு விசாரணைக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து மத்திய அரசு, சி.பி.ஐ., மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் ஆகியவை 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(மார்ச்) 4-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.  #tamilnews

Tags:    

Similar News