செய்திகள்

வாகன கடனை திருப்பி செலுத்த தாமதம்: விவசாயியை டிராக்டர் ஏற்றி கொன்ற கலெக்சன் ஏஜெண்டுகள்

Published On 2018-01-22 08:40 GMT   |   Update On 2018-01-22 08:40 GMT
உ.பி.யில் வாகன கடனை திருப்பி செலுத்த தாமதமானதால் விவசாயியை கலெக்சன் ஏஜெண்டுகள் டிராக்டர் ஏற்றி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் சீத்தாபூர் அருகே உள்ள பவுரி கிராமத்தை சேர்ந்தவர் ஜியான்சந்திரா (வயது 45). தலித் சமூகத்தை சேர்ந்தவர்.

விவசாயியான இவர் 2015-ம் ஆண்டு ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் கடன்பெற்று டிராக்டர் வாங்கி இருந்தார். அந்த டிராக்டருக்கு 2017 டிசம்பர் வரை ரூ.4 லட்சம் வரை கடன் திருப்பி செலுத்தி இருந்தார். ஜனவரி மாதம் ரூ.65 ஆயிரம் பணம் செலுத்தினார்.

ஆனாலும் அவர் செலுத்திய பணம் குறைவாக உள்ளது. உடனடியாக பணத்தை தர வேண்டும் என்று நிதி நிறுவனம் கூறி வந்தது. அந்த நிறுவனம் கடன் பெற்றவர்களிடமிருந்து கடனை வசூலிக்க ஏஜெண்டுகளை நியமித்து இருந்தது.

அந்த ஏஜெண்டுகளிடம் ஜியான்சந்திராவிடம் பணத்தை வசூலிக்கும் பொருப்பை ஒப்படைத்திருந்தனர். கலெக்சன் ஏஜெண்டுகள் 5 பேர் ஜியான்சந்திரா வீட்டுக்கு வந்தனர். அப்போது ஜியான்சந்திரா தனது தோட்டத்தில் இருந்தார். உடனே 5 பேரும் அங்கு சென்றனர்.

ஜியான்சந்திராவிடம் இப்போதே பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு அவர் நான் உரிய பணத்தை தொடர்ந்து செலுத்தி வருகிறேன். எனவே உடனடியாக பணத்தை செலுத்த அவசியம் இல்லை என்று கூறினார்.

இதனால் கலெக்சன் ஏஜெண்டுகள் ஜியான்சந்திராவிடம் இருந்து டிராக்டரை பறித்து ஓட்டி செல்ல முயன்றனர். அதை தடுப்பதற்காக டிராக்டரின் பேனட்டில் ஜியான்சந்திரா ஏறி அமர்ந்து போராட்டம் செய்தார். ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல் டிராக்டரை வேகமாக ஓட்டி சென்றனர்.

அப்போது ஜியான்சந்திரா கீழே விழுந்தார். அவர் மீது டிராக்டர் டயர் ஏறியது. அதில் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் கிராமமக்கள் திரண்டு வந்தனர். அதற்குள் 5 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

ஜியான்சந்திரா பிணத்தை எடுத்து செல்வதற்காக போலீசார் வந்தனர். அவர்களையும் கிராம மக்கள் தடுத்து நிறுத்தினார்கள். பிணத்தை எடுத்து செல்லவிடாமல் தடுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News