செய்திகள்

தேர்தல் ஆணையம் பரிந்துரை ஏற்பு: 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து ஜனாதிபதி உத்தரவு

Published On 2018-01-21 10:47 GMT   |   Update On 2018-01-21 10:47 GMT
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் உத்தரவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் கையெழுத்திட்டார். #aamaadhmimlas #electioncommision #ramnathkovind
புதுடெல்லி:

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சியில், முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவர் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 21 பேரை பாராளுமன்ற செயலர்களாக நியமித்தார். இது அமைச்சருக்கு நிகரான பதவி ஆகும். 

இதனால், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள், ஆதாயம் தரும் கூடுதல் பதவியை வகித்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. தேர்தல் ஆணையத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. 

இரட்டை ஆதாய புகாரில் சிக்கிய 21 எம்.எல்.ஏ.க்களில் ஜர்னைல் சிங் ராஜினாமா செய்ததால்  அவர் மீதான குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மற்ற 20 பேர் மீதான புகார் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.



இதற்கிடையே, இரட்டை பதவி விவகாரம் தொடர்பாக,  ஆதாயம் தரும் பதவி வகிக்கக் கூடாது என்ற விதியின் கீழ் 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யுங்கள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, 20 ஆம் ஆத்மி எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் உத்தரவில்  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் கையெழுத்திட்டார்.

ஜனாதிபதியின் நடவடிக்கையை தொடர்ந்து, மேற்கண்ட 20 எம்.எல்.ஏ.க்கள் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என தெரிகிறது.  #aamaadhmimlas #electioncommision #ramnathkovind #tamilnews
Tags:    

Similar News