செய்திகள்

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை பெங்களூரு வருகை

Published On 2017-12-30 02:28 GMT   |   Update On 2017-12-30 02:28 GMT
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை(ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு வருகிறார். சட்டசபை தேர்தல் வியூகங்களை அவர் வகுக்க உள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பரிவர்த்தனா யாத்திரை என்ற பெயரில் மாற்றத்திற்கான பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்த பயணம் தொடக்க விழா கடந்த நவம்பர் மாதம் 2-ந் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பயணத்தை தொடங்கி வைத்தார்.

அந்த கூட்டத்தில் தொண்டர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. நாற்காலிகள் காலியாக இருந்ததால், அமித்ஷா கடும் அதிருப்தி அடைந்தார். இதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் விமர்சனம் செய்தன. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் கட்சி நிர்வாகிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டார்.



இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை(ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு வருகிறார். கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். அதில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பின்பற்ற வேண்டிய வியூகங்களை அவர் வகுத்து கட்சி நிர்வாகிகளுக்கு கூறுவார் என்று சொல்லப்படுகிறது.

மேலும் அவர் கட்சியின் பல்வேறு சார்பு அணி நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். கட்சியை பலப்படுத்த என்ன பணிகள் செய்யப்படுகிறது என்பது குறித்து அவர் விவரங்களை கேட்டு பெற உள்ளார். சரியாக பணியாற்றாத நிர்வாகிகளை அவர் எச்சரிக்க உள்ளார். மேலும் கட்சியில் கருத்துவேறுபாடுகளில் ஈடுபடுவோரை அழைத்து பேசி, அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பார் என்று கூறப்படுகிறது.

தேர்தல் நெருங்குவதால் கட்சி தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அமித்ஷா அறிவுறுத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அமித்ஷா வந்து சென்ற பிறகு கர்நாடக பா.ஜனதாவினர் கட்சியை பலப்படுத்தும் பணியில் மேலும் தீவிரம் காட்டுவார்கள் என்று பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News