செய்திகள்

கடந்த ஆண்டில் செம்மரக் கடத்தல் கும்பல் மீது 9 முறை துப்பாக்கி சூடு

Published On 2017-12-26 06:40 GMT   |   Update On 2017-12-26 06:40 GMT
திருப்பதி சேஷாசல வனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது செம்மரக் கடத்தல்காரர்களின் கல்வீச்சு தாக்குதலிருந்து தற்காத்துக் கொள்ள 9 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் பரந்து விரிந்து காணப்படும் சேஷாசலம் வனப்பகுதியில் அதிகளவில் செம்மரங்கள் வளர்ந்துள்ளது. இந்த மரங்களுக்கு வெளி நாடுகளில் அதிகளவில் மவுசு உள்ளதால் செம்மரங்களை கடத்தல் கும்பல் வெட்டி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

செம்மரக் கடத்தலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆந்திர மாநில அரசு செம்மரக்கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவை ஏற்படுத்தியது.

இந்த பிரிவு ஏற்படுத்தப்பட்டு ஒரு ஆண்டுக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் அப்பிரிவு செம்மரக் கடத்தலை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

செம்மரக் கடத்தலை தடுக்க தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை, கடலூர், வேலூர், ஜவ்வாதுமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று செம்மரக்கட்டை வெட்டுவதை தடுப்பது குறித்து 12 லட்சம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள டி.ஆர்.ஐ. அதிகாரிகளை சந்தித்து கடத்தலை தடுப்பது குறித்து இருமுறை கலந்துரையாடியது. சேஷாசல வனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கடத்தல்காரர்களின் கல்வீச்சு தாக்குதலிருந்து தற்காத்துக் கொள்ள 9 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

செம்மரக் கடத்தலை தடுப்பது குறித்து பயிற்சி பட்டறை நடத்தியது. செம்மரக் கடத்தல் தடுப்பு வாகனச் சோதனையின் போது பிட்டு, ஹண்டர் மோப்ப நாய்களை பயன்படுத்தி 31 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஓர் ஆண்டில் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களை சேர்ந்த 10,558 செம்மரத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 101 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News