செய்திகள்

டெல்லி: மைக்ரோவேவ் ஓவனில் கடத்தி வரப்பட்ட 56.69 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Published On 2017-12-17 10:57 GMT   |   Update On 2017-12-17 10:57 GMT
டெல்லி விமான நிலையத்தில் மைக்ரோவேவ் ஓவனில் மறைத்து கடத்தி வரப்பட்ட 56.69 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புதுடெல்லி:

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் அதிகளவு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதை கண்காணித்து கடத்தல் காரர்களை கைது செய்ய சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும்  அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக பல்வேறு நூதன முறைகளை கடத்தல்காரர்கள் அரங்கேற்றுகிறார்கள்.

அந்த வகையில், டெல்லி விமான நிலையத்தில் இன்று சோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டு பயணிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மைக்ரோவேவ் ஓவனை சோதனை செய்த அதிகாரிகள் அதில் தங்கம் மறைத்து, கடத்திவரப்பட்டதை கண்டுபிடித்தனர்.



இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் கடத்தி வந்த தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். கடத்திவரப்பட்ட தங்கத்தின் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் 56 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை டெல்லி விமான நிலையத்தில் சுமார் 59.27 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக  கூறப்படுகிறது.
Tags:    

Similar News