செய்திகள்

பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து தரப்பும் கோபம் - ராகுல் காந்தி கருத்து

Published On 2017-12-12 23:12 GMT   |   Update On 2017-12-12 23:12 GMT
குஜராத்தில், அனைத்து தரப்பினரும் பா.ஜனதா மீது கோபத்தில் உள்ளதாகவும், மக்கள் மனநிலை, பா.ஜனதாவுக்கு எதிராக சென்று கொண்டிருப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஆமதாபாத்:

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல்முறையாக, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘காங்கிரஸ் தலைவராக உங்கள் பணி எப்படி இருக்கும்?’ என்று நிருபர்கள் கேட்டதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-



தற்போது, அரசியலே அசிங்கமாகி விட்டது. இந்த அரசியல் போக்கை மாற்ற விரும்புகிறேன். அன்பு மூலமாக அரசியல் செய்யும் காங்கிரசின் கொள்கையை பரப்புவேன்.

குஜராத்தில், அனைத்து தரப்பினரும் பா.ஜனதா மீது கோபத்தில் உள்ளனர். மக்கள் மனநிலை, பா.ஜனதாவுக்கு எதிராக சென்று கொண்டிருக்கிறது. எனவே, அவர்களுக்கு தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும். காங்கிரஸ் வெற்றி உறுதி.

மன்மோகன் சிங் பற்றி மோடி கூறியது ஏற்கத்தக்கது அல்ல. மோடி எனது அரசியல் எதிரிதான். அவர் எவ்வளவோ தவறான விஷயங்களை கூறினாலும், அவர் பிரதமர் என்பதால், அவருக்கு எதிராக ஒரு மோசமான வார்த்தை கூட என் வாயில் இருந்து வராது. நாங்கள் சாதி அரசியல் செய்யவில்லை. பா.ஜனதா போல், 10 பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படாமல், அனைவரையும் அரவணைத்து செல்கிறோம். நான் குஜராத்தில் மட்டுமே கோவிலுக்கு செல்வதாக பா.ஜனதா பொய் பிரசாரம் செய்கிறது. பிரதமர் மோடி, நீர்வழி விமானத்தில் சென்றது, உண்மையான பிரச்சினைகளை திசைதிருப்பும் செயல். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். 
Tags:    

Similar News