செய்திகள்

ஒக்கி புயல் பற்றி முன்கூட்டியே மத்திய அரசு எச்சரிக்கவில்லை: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

Published On 2017-12-02 05:44 GMT   |   Update On 2017-12-02 05:44 GMT
ஒக்கி புயல் குறித்து மத்திய அரசு எந்தவித முன் எச்சரிக்கையையும் குறித்த நேரத்தில் கேரள அரசுக்கு தெரிவிக்கவில்லை என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.
திருவனந்தபுரம்:

குமரி மாவட்டத்தை புரட்டிப்போட்ட ஒக்கி புயல் திருவனந்தபுரத்தை நோக்கி நகர்ந்து சென்றதால் கேரளாவிலும் கடும் பாதிப்பை அந்த புயல் ஏற்படுத்தி உள்ளது. இதனால் திருவனந்தபுரம், கொச்சி, பத்தனம்திட்டா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இந்த மழை காரணமாக கேரளாவில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் பெரிய கடல் பரப்பு உள்ளதால் விசைப்படகுகள் மூலம் ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

திருவனந்தபுரத்தில் இருந்து 62 படகுகளிலும், பூத்துறையில் இருந்து 28 படகுகளிலும், கொச்சியில் இருந்து 200 படகுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் நடுக்கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்தனர்.

கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு, சூறாவளி காற்று காரணமாக மீனவர்கள் கரைக்கு திரும்ப தொடங்கினார்கள். ஆனாலும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகிவிட்டனர்.

இதைதொடர்ந்து போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலம் கேரள மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் அவர்களை நினைத்து சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

கேரளாவில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

கேரளாவில் இருந்து மீன்பிடிக்க சென்று நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை கணக்கெடுக்கும் பணியும், அவர்களை உடனடியாக மீட்கும் பணியும் நடந்து வருகிறது. ஒக்கி புயல் குறித்து மத்திய அரசு எந்தவித முன் எச்சரிக்கையையும் குறித்த நேரத்தில் கேரள அரசுக்கு தெரிவிக்கவில்லை. ஐதராபாத்தில் உள்ள பேரழிவு மேலாண்மை துறையும் கேரள அரசுக்கு இதுபற்றி எந்த எச்சரிக்கையும் செய்யவில்லை. நேற்று பிற்பகல்தான் புயல் குறித்த எச்சரிக்கை எங்களுக்கு கிடைத்தது.

இதன் காரணமாகவே கேரளாவில் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. முன் எச்சரிக்கை கிடைக்காத காரணத்தால் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப முடியவில்லை. அவர்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News