செய்திகள்

முல்லைப் பெரியாறில் வாகன நிறுத்தம்: தமிழக அரசின் வழக்கு 27-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

Published On 2017-11-23 05:43 GMT   |   Update On 2017-11-23 05:43 GMT
முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்கும் கேரளாவின் நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக 27-ம் தேதி விசாரிக்கப்படுகிறது.
புதுடெல்லி:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியின் தேக்கடி ஆனைவாசல் பகுதியில் வாகன நிறுத்தம் கட்டும் பணியில்  கேரள அரசு ஈடுபட்டது. அந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது என, சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு 999 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதால் அதில் கட்டுமானப் பணிகளை அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு வாதிட்டது. இவ்வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் தமிழகத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியதுடன், தமிழக அரசின் மனுவை  தள்ளுபடி செய்தது.

‘கேரளா அரசு வாகன நிறுத்தம் அமைக்க, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், வன பாதுகாப்பு சட்டத்தில் அனுமதி பெற தேவையில்லை. எனவே, கேரளா அரசு வாகன நிறுத்தம் அமைக்க தடையில்லை’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.



இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.

அதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், இவ்வழக்கு அவசர வழக்காக வரும் 27-ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News