செய்திகள்

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்கிறது: மூடிஸ் நிறுவனம் பாராட்டு

Published On 2017-11-18 01:37 GMT   |   Update On 2017-11-18 01:37 GMT
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் செல்வதாக ‘மூடிஸ்’ நிறுவனம் பாராட்டு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசு கடந்த ஆண்டு அமல்படுத்திய பணமதிப்பு நீக்கம் மற்றும் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்திய ஜி.எஸ்.டி. வரி போன்ற திட்டங்கள் இந்திய பொருளாதார வளர்ச்சியில் சிக்கலை ஏற்படுத்தின. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சரிந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் குறைகூறி வருகின்றன.

ஆனால் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் செல்வதாக அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் முதலீட்டாளர்கள் சேவை மற்றும் மதிப்பீட்டு நிறுவனமான ‘மூடிஸ்’ கூறியுள்ளது. இந்தியாவில் நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களுடன் வளர்ச்சி வாய்ப்புகள் மேம்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குறியீட்டு தரவரிசையை 13 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக Baa3 -ல் இருந்து Baa2 ஆக உயர்த்தி உள்ளது. இதன் மூலம் பிலிப்பைன்ஸ், இத்தாலி போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த தரவரிசை என்பது மிதமான கடன் ஆபத்துடன் கூடிய முதலீட்டு தரநிலை ஆகும்.

அத்துடன் இந்திய பொருளாதாரம் குறித்த தனது மதிப்பீட்டு பார்வையை ‘நேர்மறை’ என்ற நிலையில் இருந்து ‘நிலையானது’ என்ற தரத்துக்கு மூடிஸ் உயர்த்தி இருக்கிறது. முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டில் ‘நிலையானது’ நிலையில் இருந்து ‘நேர்மறை’ என்ற நிலைக்கு தரம் குறைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தியா சமீபத்தில் அறிமுகப்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரி உற்பத்தி திறன் மேம்பாட்டுக்கு மாநிலங்களுக்கு இடையே இருந்த தடையை நீக்கியது. அத்துடன் நிதிக்கொள்கை கட்டமைப்பு மேம்பாடு, வராக்கடன்களை ஒழிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உள்பட முறையான பொருளாதாரத்தில் மேலும் பல்வேறு களங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது’ என்று கூறியுள்ளது.

இந்தியாவின் கடன் சுமை, தொடர்ந்து கடன் பெறுவதற்கு தடையாக இருக்கும் நிலையில், முக்கியமான இந்த எதிர்மறை தருணங்களில் கூட தற்போதைய சீர்திருத்தங்கள் அனைத்தும் கடன் அதிகரிப்பை ஸ்திரப்படுத்தும் என நம்புவதாக மூடிஸ் கூறியுள்ளது.



இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) நடப்பு நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ள மூடிஸ், பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.யால் சமீபத்திய காலங்களில் வளர்ச்சி குறைந்தாலும், 2018-19-ம் நிதியாண்டில் 7.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றும் கூறியுள்ளது.

மூடிசின் இந்த அறிவிப்பை நிதி மந்திரி அருண் ஜெட்லி வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்தியாவின் தரநிலையை மேம்படுத்தி மூடிஸ் வெளியிட்ட அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். கடந்த 3 ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட நிர்வாக சீர்திருத்தம் மற்றும் நேர்மறையான பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அளவில் கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் இது’ என்று தெரிவித்தார்.



இதைப்போல தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனும் மூடிசின் அறிக்கையை பாராட்டி உள்ளார். இந்த மதிப்பீடு மேம்படுத்துதல் நீண்ட தாமதத்துக்குப்பின் வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இதன் மூலம் ஜி.எஸ்.டி., வங்கிகள் மூலதனத்திட்டம், திவால் குறியீடு போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
Tags:    

Similar News