செய்திகள்

ஜாதவை பார்க்க மனைவிக்கு அனுமதி: இந்தியாவின் தொடர் நடவடிக்கையே காரணம் - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

Published On 2017-11-11 14:14 GMT   |   Update On 2017-11-11 14:14 GMT
சிறையில் வாடும் குல்பூஷன் ஜாதவை பார்க்க அவரது மனைவிக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளதற்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையே காரணம் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். ராணுவ கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது.

ஆனால், குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச 
நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது.

குல்பூஷன் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய மனுவை பாகிஸ்தான் ராணுவ தளபதியும், ராணுவ கோர்ட்டும் நிராகரித்து விட்டது.

இதற்கிடையே, குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், சிறையில் வாடும் குல்பூஷன் ஜாதவை பார்க்க அவரது மனைவிக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளதற்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையே காரணம் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாகிஸ்தானின் இந்த அறிவிப்புக்கு கிடைத்துள்ள பாராட்டு பிரதமர் மோடியை சேரும். இந்தியா எடுத்து வந்த தொடர் முயற்சிகளால் தான் இந்த நடவடிக்கை சாத்தியமாகி உள்ளது என கூறியுள்ளார்.
Tags:    

Similar News