செய்திகள்

எனது கொடும்பாவிகளை எரிப்பதை கண்டு அஞ்ச மாட்டேன்: பிரதமர் மோடி ஆவேசம்

Published On 2017-11-05 13:49 GMT   |   Update On 2017-11-05 13:49 GMT
எனது கொடும்பாவிகளை எரிப்பதை கண்டு அஞ்ச மாட்டேன். ஊழலக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
சிம்லா:

68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 9-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு நடைபெறும் காங்கிரஸ் அரசை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் முதல் மந்திரி வேட்பாளராக முன்னாள் முதல் மந்திரி பிரேம் குமார் துமால் பெயரை அமித் ஷா அறிவித்தார். இந்த அறிவிப்பால் அங்கு பா.ஜ.க.வுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என மாநில பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இங்குள்ள குல்லு மற்றும் பலம்ப்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசிய மோடி கூறியதாவது:-

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 3 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 5 ஆயிரம் நிறுவனங்களில் நடைபெற்ற சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த 3 லட்சம் நிறுவனங்களும் தங்களது அலுவலகங்களில் இரண்டு நாற்காலிகள், ஒரு மேஜையை வைத்துகொண்டு பலகோடி ரூபாய் கருப்புப் பணத்தை பரிவர்த்தனை செய்துள்ளன என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

பண மதிப்பு இழப்பு கட்டாயம் என யஷ்வந்த்ராவ் சவான் தலைமையிலான குழு பரிந்துரை செய்தும்,  நாட்டின் நலனைவிட தனது கட்சியின் நலன் முக்கியமாக பட்டதால் அதை அமல்படுத்த இந்திரா காந்தி மறுத்து விட்டார். காங்கிரசையும், ஊழலையும் பிரிக்கவே முடியாது. அவை மரமும் வேரும் போன்றவை.

ஊழல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த காங்கிரஸ் தலைவர்கள் ஊழலைப்பற்றி இப்போது பேசுகிறார்கள். ஊழல் ஒன்றுதான் காங்கிரசின் ஒரே அடையாளம். தற்போது பினாமி சொத்துகளின்மீது நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வந்து விடுவேன் என்ற பயம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.

பண மதிப்பு இழப்பு விவகாரத்தில் வரும் 8-ம் தேதியை துக்கநாளாக கடைபிடிக்கப் போவதாக காங்கிரசார் அறிவித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின்போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை எடுத்திருந்தால் நான் இதை செய்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.

இந்த நடவடிக்கையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட காங்கிரசார் ஆத்திரத்தில் துக்கநாள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். என்னுடைய கொடும்பாவிகளை எரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியால் என்னை பயமுறுத்த முடியாது.  ஊழலக்கு எதிரான எனது போர் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News