செய்திகள்

காங். ஆட்சியில் குஜராத் புறக்கணிக்கப்பட்டதை வாக்காளர்கள் மறக்க கூடாது: அமித்ஷா

Published On 2017-11-05 08:10 GMT   |   Update On 2017-11-05 08:10 GMT
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குஜராத் மாநிலம் புறக்கணிக்கப்பட்டதை வாக்காளர்கள் ஒரு போதும் மறந்து விடக் கூடாது என்று பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
காந்தி நகர்:

பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா குஜராத் மாநில தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் மொத்தம் உள்ள 33 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.

கட்சு மாவட்டத்தில் காந்திதாம் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

குஜராத் மாநிலத்தை காங்கிரஸ் எப்போதுமே புறக்கணித்து வந்துள்ளது. எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் குஜராத் மாநிலம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்பட்டது.

உரிய நிதிகளை வழங்குவது இல்லை. கச்சா எண்ணெய்க்காக குஜராத்துக்கு வழங்க வேண்டிய ராயல்டி தொகையையும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கவில்லை. கட்சு பகுதிக்கு செய்ய வேண்டிய திட்டங்களுக்கும் உதவவில்லை.

நர்மதா அணை திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுத்தார்கள். அணை கட்டுமான பணி முடிந்தும் அதை செயலுக்கு கொண்டு வர அனுமதி தரவில்லை. இப்படி குஜராத்துக்கு எதிராகவே காங்கிரஸ் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

எனவே, அடுத்த மாத தேர்தலில் வாக்காளர்கள் இதையெல்லாம் நினைத்து பார்த்து ஓட்டு போட வேண்டும். காங்கிரஸ் ஆட்சி குஜராத்தை புறக்கணித்ததை ஒரு போதும் மறக்க கூடாது.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.
Tags:    

Similar News