செய்திகள்

குஜராத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியுடன் சரத்யாதவ் அணி கூட்டணி

Published On 2017-10-26 06:53 GMT   |   Update On 2017-10-26 06:53 GMT
குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக சரத்யாதவ் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

லல்லுபிரசாத் யாதவ் உடனான உறவை முறித்து நிதிஷ்குமார் பாரதீய ஜனதாவுடன் இணைந்து ஆட்சி நடத்துவதற்கு அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதிருப்தி தலைவரான அவர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக சரத்யாதவ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



கடந்த 2014-ம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு 69 சதவீத வாக்குகள் கிடைத்தன. பாரதீய ஜனதாவுக்கு 31 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. எனவே குஜராத் தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும்.

இந்த தேர்தலை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ராகுல் காந்தியுடன் ஏற்கனவே பேசி விட்டேன். அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

காங்கிரஸ்தான் முதன்மையான எதிர்க்கட்சி. இதனால் காங்கிரசுடன் யார் இணைய வேண்டும் என்பதை அக்கட்சியே முடிவு செய்யும். தொகுதி பங்கீடு குறித்து காங்கிரசுடன் இன்னும் விவாதிக்கவில்லை.

இவ்வாறு சரத்யாதவ் கூறினார்.
Tags:    

Similar News