செய்திகள்

மராட்டியம்: தூங்கிய குழந்தையை இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தை: பீதியில் மக்கள்

Published On 2017-10-22 13:47 GMT   |   Update On 2017-10-22 13:47 GMT
மராட்டிய மாநிலத்தின் நாசிக்கில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 2 1/2 வயது குழந்தையை, சிறுத்தை காட்டுக்குள் இழுத்துச் சென்று கொன்ற சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.

மும்பை:

மராட்டிய மாநிலத்தின் நாசிக் மாவட்டத்திற்குட்பட்ட தால்வடே-பாமெர் பகுதி காட்டின் அருகில் அமைந்துள்ளது. இந்த காட்டில் வாழ்ந்துவரும் வனவிலங்குகள் அவ்வப்போது மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து ஆடு, மாடு உள்ளிட்ட மிருகங்களை வெட்டையாடி வந்துள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த ஒரு சிறுத்தை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டரை வயது மதிக்கத்தக்க கோமல் நம்தாஸ் என்ற குழந்தையை காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. காலையில் எழுந்த உடன் குழந்தை காணாமல் போனதை அறிந்த பெற்றோர் ஊர்மக்களிடம் இதுகுறித்து கூறியுள்ளனர்.

இதையடுத்து அருகில் உள்ள காட்டுக்குள் ஊர்மக்கள் சென்று தேடியுள்ளனர். சுமார் 10 மணியளவில் காணாமல் போன குழந்தை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததைப்பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்த ஊர்மக்கள், அந்த சிறுத்தையை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை வீட்டுக்குள் நுழைந்து சிறுத்தை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News