செய்திகள்

நிதிஷ்குமார் பிரச்சாரத்தால் கவரப்பட்ட பள்ளி முதல்வர்: வாங்கிய வரதட்சணை ரூ.4 லட்சத்தை திருப்பித் தந்தார்

Published On 2017-10-17 23:45 GMT   |   Update On 2017-10-17 23:45 GMT
வரதட்சணைக்கு எதிராக முதல் மந்திரி செய்துவரும் பிரச்சாரத்தால் கவரப்பட்ட ஓய்வுபெற்ற பள்ளி முதல்வர் தன் மகனுக்கு வாங்கிய வரதட்சணை பணத்தை திருப்பித் தந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.
பாட்னா:

வரதட்சணைக்கு எதிராக முதல் மந்திரி செய்துவரும் பிரச்சாரத்தால் கவரப்பட்ட ஓய்வுபெற்ற பள்ளி முதல்வர் தன் மகனுக்கு வாங்கிய வரதட்சணை பணத்தை திருப்பித் தந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. முதல்-மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில்குமார் மோடியும் பதவி வகிக்கின்றனர்.

சமீப காலமாக, முதல்-மந்திரி நிதிஷ்குமார் வரதட்சணை கொடுமை மற்றும் குழந்தை திருமணத்துக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.



இந்நிலையில், முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் பிரச்சாரத்தால் கவரப்பட்ட ஓய்வுபெற்ற பள்ளி முதல்வர், தனது மகனுக்கு வாங்கிய வரதட்சணை பணத்தை திருப்பித் தந்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:

பீகார் மாநிலம் ஆரா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் வசித்து வருபவர் ஹிரிந்திரா சிங். ஓய்வுபெற்ற பள்ளி முதல்வரான இவர், தனது மகனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரது மகளுக்கும் டிசம்பரில் திருமணம் நடத்த முடிவுசெய்தார். இந்த திருமணத்துக்காக மணமகள் வீட்டாரிடம் இருந்து 4 லட்சம் ரூபாயை வரதட்சணையாக பெற்றுள்ளார்.

இதற்கிடையே, கடந்த 4-ம் தேதி ஆராவில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஹிரிந்திரா சிங் பார்வையாளராக கலந்து கொண்டார். அப்போது நிதிஷ்குமார் வரதட்சணைக்கு எதிராக பேசியதை கேட்டார்.

அவரது பிரசாரத்தால் ஈர்க்கப்பட்ட ஹிரிந்திரா சிங், தனது மகனுக்கு வாங்கிய வரதட்சணை பணம் நான்கு லட்சம் ரூபாயை மணமகள் வீட்டாரிடம் திருப்பித்தர முடிவு செய்தார். அதன்படி அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து, வரதட்சணை பணத்தை திருப்பித் தந்துள்ளார்.

இதுகுறித்து ஹிரிந்திரா சிங் கூறுகையில், முதல் மந்திரி நிதிஷ்குமார் கூறிய கருத்துக்களில் உள்ள உண்மையை உணர்ந்து கொண்டேன், எனவே வரதட்சணை பணத்தை திருப்பித் தந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மணமகளின் அண்ணன் ரோஹித் சிங் கூறுகையில், மணமகனின் தந்தை வரதட்சணை பணத்தை திருப்பித் தந்துவிட்டார். நல்ல எண்ணத்துடன் அவர்கள் பணத்தை தந்தது பெருமையாக உள்ளது. இத்தகைய நல்ல குடும்பத்தில் எங்கள் பெண்ணை திருமணம் செய்து தருவது மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

முதல்-மந்திரியின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு ஓய்வுபெற்ற பள்ளி முதல்வர், தான் வாங்கிய வரதட்சணை பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.   
Tags:    

Similar News