செய்திகள்

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்போம்: இந்தியா, இலங்கை உறுதி

Published On 2017-10-15 00:26 GMT   |   Update On 2017-10-15 00:26 GMT
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்போம் என இந்தியாவும், இலங்கையும் உறுதி பூண்டன.
புதுடெல்லி:

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்போம் என இந்தியாவும், இலங்கையும் உறுதி பூண்டன.

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றால், அவர்கள் பத்திரமாக கரைக்கு திரும்புவது கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தால், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தார்கள் என்று குற்றம் சாட்டி, அவர்களை கைது செய்வது, படகுகளை கைப்பற்றுவது, சில நேரங்களில் துப்பாக்கிச்சூடு நடத்துவது, மீனவர்களின் உயிர்களைப் பறிப்பது என்பதை இலங்கை கடற்படை தொடர் கதை ஆக்கி வருகிறது.

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற குரல் நீண்டகாலமாக ஓங்கி ஒலித்து வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று மத்திய விவசாய மந்திரி ராதாமோகன் சிங்கும், இலங்கை மீன்வளத்துறை மந்திரி மகிந்தா அமரவீராவும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பை தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறி இருப்பதாவது:-

கூடிய விரைவில், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு இரு மந்திரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். பாக் ஜல சந்தி பகுதியில் ஆழ்கடலில் இரட்டை மடி வலைகளை போட்டு மீன் பிடிப்பதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை தரப்பிடம் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மீனவர்களுக்கான மாற்று வாழ்வாதார வாய்ப்புகள் குறித்தும் கூறப்பட்டது.

இந்தியாவின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட இலங்கை, சட்டவிரோதமாக மீன் பிடிப்பதை தடுப்பதற்காக தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் விளக்கினர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டது. 
Tags:    

Similar News