செய்திகள்

கேரளா: பா.ஜ.க அலுவலகத்தில் இரும்பு குண்டுகள், உடைவாள் உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

Published On 2017-10-10 10:11 GMT   |   Update On 2017-10-10 10:11 GMT
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் இரும்பு குண்டுகள், உடைவாள் உள்ளிட்ட பல பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பா.ஜ.க மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. பா.ஜ.க. தொண்டர்களை இடதுசாரிகள் தாக்குவதாக கூறி சமீபத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அம்மாவட்டத்தில் பேரணி நடத்தினார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பேரணியில் பா.ஜ.க.வின் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், போதிய அளவு மக்கள் ஆதரவு இல்லாததால் இந்த பேரணி பல இடங்களில் பிசுபிசுத்தது. இதற்கிடையே, இதே மாவட்டத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை கண்டித்து பானூர் பகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று முன்தினம் கண்டன பேரணி நடத்தினர்.

பேரணி பானூர் சந்திப்பை அடைந்த போது திடீரென ஒரு கும்பல் பேரணியில் வந்தவர்கள் மீது வெடிகுண்டு வீசியது. இதில் போலீசார் உள்பட 18 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது அங்கிருந்து இரும்பு குண்டுகள், உடைவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்திவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News