செய்திகள்

முன்பதிவு செய்யப்பட்ட ரெயிலில் தூங்குவதற்கு புதிய கட்டுப்பாடு: ரெயில்வே முடிவு

Published On 2017-09-17 19:14 GMT   |   Update On 2017-09-17 19:14 GMT
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரைதான் தூங்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
புதுடெல்லி:

ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள், பயணத்தின் போது தங்களுக்குரிய படுக்கையில் படுத்து தூங்குவது வழக்கம். இதில் மேல்படுக்கையில் படுத்து தூங்குபவர்களுக்கு எந்த வித தொந்தரவும் இல்லை.

ஆனால் நடுபடுக்கை மற்றும் கீழ்படுக்கையில் தூங்கும் பயணிகளுக்கு இடையே அடிக்கடி வாய்தகராறு ஏற்படுகிறது. ஏனெனில் அவர்களில் யாரேனும் ஒருவர் படுக்க விரும்பாமல் அமர்ந்திருக்க விரும்பினால் மற்றொருவரும் தூக்கத்தை தவிர்த்து அவருடன் அமர்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதன் காரணமாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரைதான் தூங்க வேண்டும், மற்ற நேரத்தில் சக பயணிகள் கேட்கும் பட்சத்தில் கட்டாயம் அமர்ந்திருக்க வேண்டும் என ரெயில்வே விதிமுறை உள்ளது.

இந்த நிலையில், இந்த கால அவகாசத்தை ஒரு மணி குறைத்து ரெயில்வே துறை உத்தரவிட்டு உள்ளது. அதன்படி முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரைதான் தூங்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதே சமயம் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் இருக்கும் பட்சத்தில் சக பயணிகள் அவர்களுக்கு ஒத்துழைத்து அவர்கள் படுத்திருக்க அனுமதி வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News