செய்திகள்

சிறைமரணங்கள் அரசின் வெளிப்படையான அலட்சிய நிலையை குறிக்கிறது - சுப்ரீம் கோர்ட்

Published On 2017-09-15 23:02 GMT   |   Update On 2017-09-15 23:02 GMT
சிறைகளில் மர்மமான முறையில் இறந்த கைதிகளின் குடும்பத்தினரை கண்டுபிடித்து, அவர்களுக்கு தகுந்த நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி: 

இந்தியா முழுவதும் 1,382 சிறைச்சாலைகள் உள்ளன. இவற்றில் மனித தன்மையற்ற சூழ்நிலைகள் நிலவுகின்றன. கைதிகள் மர்மமான முறையில் இறக்கின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று கடந்த 2013ல் பொதுநல வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.பி.லோகூர், தீப் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. 

43 பக்க தீர்ப்பு விவரம் வருமாறு: 

முதல் முறையாக சிறைக்கு செல்பவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வேண்டிய ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். இந்த ஆலோசனைகளை வழங்க, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறையில் உள்ள கைதிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை மாநில அரசுகள் செய்ய வேண்டும். தற்போதுள்ள மருத்துவ வசதிகளை பற்றி முழு ஆய்வு நடத்தி, அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் சேர்க்கப்பட்ட இளம் குற்றவாளிகள் அல்லது ஆதரவற்றோர்கள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்திருந்தால், அவர்களை பற்றிய தகவல்களை மாநில அரசின் உதவியுடன் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சேகரித்து, பட்டியல் தயாரிக்க வேண்டும். அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 2012 முதல் 2015 வரையில் அல்லது அதற்கு பிறகு மர்மமான முறையில், இயற்கைக்கு மாறான வகையில் இறந்த கைதிகளின் விவரங்களை சேகரித்து, அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தேசிய குற்றப்பதிவு ஆணையத்திடம் இருந்தும் அதற்கான தகவல்களை கேட்டு பெறலாம்.

இந்த வழக்குளை விசாரித்து, இறந்த கைதிகளின் குடும்பத்தினரை கண்டுபிடித்து தகுந்த நஷ்டஈடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதேபோல், கடந்த காலங்களில் இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தகுந்த நஷ்டஈடு கிடைக்காமல் போயிருந்தால், அவற்றையும் வழக்காக எடுத்து தகுந்த நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த தீர்ப்பு நகலை அனைத்து மாநில அரசுகளுக்கும், உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கும் உச்ச நீதிமன்ற செயலாளர் ஒரு வாரத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News